tamilnadu epaper

தாயுமானவன்

தாயுமானவன்

( அன்னையர் தினம் - குறுங் கதை)

        

அந்த தனியார்பள்ளியில் மதியம் உணவு இடைவேளைக்கு மணியடித்ததும், பட்டாம்பூச்சிகள் போல் மாணவ மாணவியர் பறந்து வந்து அந்த விளையாட்டுத்திடலை நிறைத்தனர்.

                சலோமி டீச்சர் அந்த ஆறாம் வகுப்பு அறையிலேயே அமர்ந்து, வீட்டுப் பாடங்களை திருத்திக் கொண்டிருந்தாள்.அழுகையுடன் கூடிய விசும்பல் ஒலி அவளுடைய கவனத்தைத் திருப்பவே, அவள் நிமிர்ந்தாள். மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்த அம்பிகைதான் அழுது கொண்டிருந்தாள். சலோமி டீச்சர்' சாப்பிட போகவில்லையா?' என்று கேட்க; அவள் வெறுமனே தலையசைத்து' டீச்சர்! எனக்கு உடம்பு சரியில்லை. வீட்டுக்குப் போகணும்.'என்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். டீச்சர் அவள் அருகில் வந்து' உனக்கு என்ன ஆச்சு? உடம்புக்கு என்ன?'என்று ஆதரவாக கேட்டதும், அம்பிகை ஒன்றும் பேசாமல் எழுந்து நின்று,' எனக்கு வயிறு மிகவும் வலிக்கிறது' என்று சொன்னதும், சலோமி டீச்சருக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. பயப்படாதே! நான் உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன்,' என்று சொல்லி, அம்பிகையை ஆசிரியர் அலுவலக அறைக்கு கூட்டிச் சென்று, அவளுக்கு அந்த சமயத்திற்கான உதவிகளைச் செய்ததுடன் அவளை உணவு உண்ண வைத்ததுடன், ஆட்டோவில் அம்பிகையை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள்.

                   பூட்டிய வீடு அவர்களை வரவேற்கும்; என்று சலோமி டீச்சர் எதிர்பார்க்கவில்லை. அம்பிகை உள்ளே போய் தனது அலைபேசியை எடுத்துவந்து தன் தந்தைக்கு ஃபோன் பண்ணும்படி கேட்டுக் கொண்டாள். அவள் அப்பா வங்கியில் காசாளராக பணிபுரிகிறார் என்பது, அப்போதுதான் சலோமி டீச்சருக்குத் தெரியவந்தது.' மேடம் ! என் பொறுப்புகளை நான் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து வர சிறிது தாமதமாகலாம். நீங்கள் தயவுசெய்து அம்பிகையுடன் நான் வரும் வரை இருக்க முடியுமா? தாயற்ற பெண் குழந்தைக்குத் துணையாக இருக்க வேண்டுகிறேன். இது பற்றி அவளுக்கு நான் எதுவும் சொல்லவில்லை. என் தவறுதான். எப்படி செயல்பட வேண்டும், என்பதே எனக்குத் தெரியவில்லை. அவள் ஆறாவது தான் படிக்கிறாள். இத்தனை சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கே மிகவும் ஆச்சரியமாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.' என்று கூறக் கேட்ட சலோமிக்கு, அம்பிகையைப் பார்க்க பாவமாய் இருந்தது. ' எனக்கு என்ன ஆச்சு , டீச்சர் என்று விசும்பிக் கொண்டே கேட்டவளுக்கு, புரியும் படி தக்க ஆலோசனைகளைச் சொல்லி அவள் தந்தை கேட்டுக் கொண்டபடி அம்பிகையுடன் துணையாக இருந்து அவளை எளிதாக்கினாள்.

                சமையல்அறை சென்று எளிதான இனிப்பு ஒன்று செய்து அவளை நீராட செய்து, நல்ல உடுப்பு ஒன்றை உடுத்தி செய்து, அம்பிகையின் தந்தையை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் சலோமி, தன்னை, அம்பிகையின் அன்னையாகவே உணர்ந்தாள்.

                     சரியான நேரத்தில் தன்னை மனதளவில் அன்னையாக பரிமளிக்கச் செய்த வேளாங்கண்ணி மரியன்னைக்குத் தோத்திரமும் நன்றியும் சொல்லி முடித்த சமயம் , அம்மா கையின் தந்தை சங்கரலிங்கம் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார். அவளுக்கு நன்றி கூற முயன்று கொண்டிருந்தாலும், அவரால் உணர்ச்சிப் பெருக்கால் , பேச முடியவில்லை. ' அம்பிகை! சலோமி டீச்சரின் பாதம் தொட்டு வணங்கி , அவர்களிடம் முதல் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்,' என்று மட்டுமே சொல்ல முடிந்தது.


-சசிகலா விஸ்வநாதன்