tamilnadu epaper

திருக்கடையூர் அபிராமி*

திருக்கடையூர் அபிராமி*

'அம்பிகையை தரிசிக்க சரபோஜி மன்னர் வருகிறார்' என்று கோயிலே பரபரத்துக் கிடந்தது. ஆனால் உலக நினைவேயின்றி சுப்ரமணிய பட்டர் அம்பிகையின் முக ஜொலிப்பில் மெய் மறந்திருந்தார். 

 

அவர் ஸ்ரீவித்யை உபாசனையில் ஈடுபட்டு பராசக்தியையே எப்போதும் பூஜித்து, தன் நினைவு இன்றி இருந்து வந்தார். 

 

அன்று தை அமாவாசை, மன்னர் பட்டரைப் பார்த்து விட்டு, அங்கிருந்தவர்களிடம் ""யார் இவர்?'' என்று கேட்கிறார். ""இவர் ஒரு பித்தர், ஒரு துர்தேவதையை உபாசித்து எப்போதும் இப்படியே மெய் மறந்து கிடக்கிறார்!'' என்றனர்.

 

மன்னர் அவரைப் பரிசோதிக்க எண்ணி, "இன்று என்ன திதி?''என்று கேட்கிறார். முழுநிலவுபோல் ஒளி வீசிய அன்னையின் முக வதனம் கண்டு பட்டர் "இன்று பெளர்ணமி திதி!'' என்கிறார்.

 

மன்னர், "இன்று நிலவு உதயமாகவில்லை எனில், உனக்கு மரண தண்டனை!''என்று அறிவித்து விடுகிறார்.

 

"தாயே, உன் நினைவில் ஆழ்ந்தே நான் இன்று பெளர்ணமி என்றேன். நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்!''என்று பட்டர் அம்பாளைப் பிரார்த்தனை செய்து, ஆழமாய் ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். பின் மேலே ஒரு விட்டமும், அதில் நூறு கயிறுகளால் உறியையும் கட்டினார். அதில் அமர்ந்து அம்பிகையின் மேல் அந்தாதி பாட ஆரம்பித்தார்.

 

ஒவ்வொரு பாடலாய் பாடப்பாட ஒவ்வொரு கயிறாய் அறுத்துக் கொண்டே வந்தார். 

 

எழுபத்தி ஒன்பதாவது பாடலான "விழிக்கே அருளுண்டு...' என்ற பாடலைப் பாடும்போது அம்பிகை தோன்றுகிறாள். அவள் காது தாடங்கம் ஒன்றைக் கழற்றி வானில் எறிய, நிலவாகப் பிரகாசிக்கிறது. மன்னர் பிரமித்து, மகிழ்ந்து பட்டரைப் போற்றி, அவருக்கு இறையிலியாக நிலங்கள் அளிக்கிறார்.

 

அம்பிகையின் உத்தரவின் பேரில் சுப்ரமணிய பட்டர் நூறு அந்தாதிப் பாடல்களைப் பாடி மகிழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" பாடல்கள் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன.

 

*மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த 

அணியே, அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே 

பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே 

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே*

 

என்று பாடுகிறார் அபிராமி பட்டர். அபிராமி அந்தாதியில் அனைத்துப் பாடல்களையும் படிக்க முடியவில்லை என்றாலும் நூற்பயனைப் படித்தாலே போதும் என்கிறார்கள்.

 

இறைவன் மேற்கு நோக்கியும், அம்பிகை கிழக்கு நோக்கி தன் பதியைப் பார்த்தபடி நிற்பதால் இது நித்தியக் கல்யாணத் தலமாக விளங்குகிறது.

 

தேவியின் திருத்தலங்கள் தொடரும்....

 

கீதா ராஜா சென்னை