ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம் மார்கத்தில் அமைந்திருப்பது நரசிங்கபுரம் என்றோர் கிராமம்.
இந்த நரசிம்மர் கோயிலை சென்றடைய மெயின் ரோடிலிருந்து சற்று உள் நோக்கி 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டி இருக்கும்.
மூலவர் ஆஜானுபாகுவாக காட்சியளிக்கிறார். இது ப்ராச்சீனமான கிராமக் கோயில் என்பது இந்த கோயிலில் அமைந்திருக்கும் சிலைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
நரசிம்மர் மூலவர், ப்ராச்சீன உற்சவர் மற்றும் புறப்பாடு காணும் நூதன உற்சவர் என்று பெருமாள் மூவராக சேவை சாதிக்கின்றார். இங்கு அதிகம் கிராமவாசிகளைத்தான் காண முடிகிறது. இது மற்றவர்களிடையில் இன்னும் ப்ராபல்யமடையவில்லை என்பதே காரணமாகும்.
சனிக்கிழமைகளில் பெரிய அளவில் மக்கள் கூட்டத்தை இங்கு காணலாம். பக்திப் பெருக்கில் இவர்கள் “கோவிந்தா” என்றழைக்கும் குரல் வானைப் பிளக்கிறது.
கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டு, தூய்மையாக சுற்று ப்ராகரங்களுடன் இருப்பது சேவார்த்திகளின் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.
தனித்தனி பெருமாள், தாயார், ஆண்டாள் சந்நிதிகள் உள்ளன. இங்கிருக்கும் தாயார் மிக மிக அழகாக காட்சி அளிக்கிறார். அவர் இங்கு பக்தர்களையே கருத்தில் கொண்டு தனி சந்நிதியில் எழுந்தருளி தயை செய்கிறார் என்று கூறப்படுகிறது.
பெருமாள் சந்நிதியில் அவர் தாயாரை அணைத்தபடி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். இதனால் இங்கு வந்து ப்ரார்த்திப்போருக்கு சகல சௌகர்யங்களும் கை கூடுகின்றன என்பது நம்பிக்கை. இது ருண, ரோக நிவாரண ஷேத்திரமாகவும் கருதப் படுகிறது.
இக்கோயில் ப்ராச்சீனமானது என்பது பலி பீடத்திற்கு செல்லும் வழியில் எதிரும் புதிருமாக அமைந்துள்ள இரு பழமையான சிங்க வடிவங்களிலிருந்து தெளிவாகிறது.
இங்கு இருபது வருடங்களாக ஒரு அர்ச்சகர்கள் குடும்பம் மிகுந்த ஈடுபாடுடன் பூஜைகளை கவனித்து வருகின்றனர். இவர்களுடன் கிராமத்து மக்கள் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பழகுவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.
தெற்கு மற்றும் வடக்கு ப்ராகாரங்களில் வட்ட வடிவில் அஷ்டலஷ்மிகள் பக்கத்திற்கு நான்காக அழகான சந்நிதிகளில் அருள் பாலிப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக உணர்கிறோம்.
இக்கோயிலுக்கு செல்லும் வழியில் தாமரை, அல்லி குளங்கள் தென்படுகின்றன.
வாரம்தோரும் வியாழன் சந்தையில் மக்களுக்கு வேண்டிய மளிகை சாமன்கள், காய்கனிகள், உபகரணங்கள் வியாபாரம் செய்யப்படுகின்றன.
மொத்தத்தில் நரசிங்கபுரம் என்ற பெயருக்கேற்ப பெருமாளும் தாயாரும் ஆண்டாளும் அஷ்டலஷ்மிகளும் சேர்ந்து அருள் பாலித்து மக்களின் குறைகளை தீர்த்து சகல சௌபாக்கியங்களையும் தடையின்றி வழங்கி அவர்களை சந்தோஷமாக வைத்துள்ளனர்.
நாமும் இத்திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு பெருமாள் தாயார் கிருபைக்கு பாத்திரமாக வேண்டும் என்ற எண்ணத்தை வெகுவாக நம்மிடம் தூண்டுகிறது என்று கூறினால் அது உண்மை.
அனைத்து சௌகரியங்களையும் அடைந்து ருண ரோக விமோசனமடைந்து மகிழ நீங்களும் நரசிங்கபுரம் பெருமாள் கோயிலை சென்று சேவித்து பலனடையலாம்.
-ரமா ஸ்ரீனிவாசன்