திருமலை:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் (15-ம் தேதி) வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் கடிதங்கள் பெறப்படும் என ஆந்திர மாநில இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் முக்கிய புள்ளிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக தரிசித்து வருகின்றனர். இவ்வாறு தினமும் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமியை தரிசிக்கின்றனர்.
ஆனால், தற்போது கோடை காலம் என்பதால், சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை, சிபாரிசு கடிதங்களை ஏற்க இயலாது என தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்தது. இது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று ஆந்திர மாநில இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி, இனி வரும் மே மாதம் 15-ம் தேதி முதல் (நாளை) வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் பெறப்படும் என அறிவித்துள்ளார்.
கங்கையம்மன் திருவிழா கோலாகலம்: திருப்பதி ஏழுமலையானின் சகோதரியாக பக்தர்களால் போற்றி வழிபடும் திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா நேற்று திருப்பதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை அம்மனுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
அதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கூழ் வார்த்தும், கும்பம் செலுத்தியும் கங்கையம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
...