சிதம்பரத்தில் 12 நாள்கள் நடை பெறும் திருவாதிரைத் திருவிழா...
மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம். இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும். இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.
அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும். அப்படிப்பட்ட அற்புதமான திருவாதிரைத் திருவிழா வரும் 11-ம் தேதி கொடியேற்றத்து டம் தொடங்க இருக்கிறது.
ஆருத்ரா என்றால் என்ன?
ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.
'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
திருவாதிரை விரதம் - ஏன்... எதற்கு... எப்படி?
ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.
இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவ பெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.
திருவாதிரை ஒருவாய் களி
சிதம்பரத்தின் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார் சேந்தனார். அவர் ஒரு விறகுவெட்டி. தினமும் ஒரு சிவனடியாருக் காவது உணவளித்து விட்ட பிறகு, உண்ணுவது சேந்தனாரின் கடமையாக இருந்தது. சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
அன்று ஒருநாள் மழை பெய்தது. அதனால் விறகு விற்க முடியாத நிலை ஏற்பட்டது. விறகு விற்றால்தான் அரிசி வாங்குவதற்கு பணம் கிடைக்கும். ஆகையால் அவரால் அன்று சமையல் சமைக்க முடியவில்லை. இருந்தாலும் சேந்தனார் அன்று மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அன்று யாரும் தென்படவில்லை. மனம் நொந்த அவரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு வந்தார்.
சிவபெருமான் சேந்தனிடம், "உண்ண ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்க சேந்தன் அகமகிழ்ந்து களியை அவருக்கு உண்பதற்காக அன்போடு அளித்தார். அதை சிவபெருமானும் மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார். பிறகு சிவபெருமான் அவரிடம் எஞ்சியிருந்த களியை, "எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா?" என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.
அன்று இரவு சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் இப்படி காட்சி கொடுத்தார். சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார். மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறக்கிறார்கள்.
அப்போது எம்பிரானைச் சுற்றிக் களி சிதறல்கள் இருப்பதை கண்டு வியந்தார்கள். இந்தச் செய்தியை அரசருக்குத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அரசன் நேற்று இரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தார்.
அப்போது சிதம்பரத்தில் தேர்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள் . சேந்தனாரும் அந்தத் தேர் திருவிழாவிற்கு வந்திருந்தார்.
அப்பொழுது சிவபெருமானைத் தேரில் அமர்த்தி இருந்தார்கள். ஆனால் அந்தத் தேர் அந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. எல்லோரும் மழைகாரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது.
"சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. அங்கு இருந்த சேந்தனாரோ "ஒன்றுமே அறிந்திடாத நான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்..." என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார் . எம்பிரானோ யாம் உனக்கு அருள் புரிவோம் என்று அருள் புரிந்தார். .
அப்போது சேந்தனார் 'மன்னுகதில்லை' என்று தொடங்கிப் பல்லாண்டு கூறுதுமே என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே தேர் அசைந்தது. அப்போது அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள்.
சேந்தனாரோ, "அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்" என்று தயங்கிக் கூற , அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்கு களி உண்ண வந்தார் என்றார். அதைக்கேட்ட சேந்தனார், எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை எண்ணிப் பரவசம் அடைந்தார். இந்த அற்புதம் நிகழ்ந்தது ஒரு திருவாதிரை தினத்தில் என்பதால் திருவாதிரை அன்று களி சமர்ப்பிட்த்து வணங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன திருவிழா 11.12.2021 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த உற்சவ நாள்கள் அனைத்திலும் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும். அதேபோன்று அனைத்து நாள்களிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஈசன் அருள்பாலிப்பார்.
உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பிட்சாடனர் திருக்கோலம் 18.12.2021 அன்று நடைபெறும். மறுநாள் அதிகாலை தனுர் லக்னத்தில் சித் சபையில் ஶ்ரீநடார மூர்த்தி க்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். நிகழ்வின் 22 ம் தேதி தெப்போத்சவம் நடைபெறுவதோடு விழா நிறைவு பெறும்