tamilnadu epaper

திருவானைக்கா அகிலாண்டேச்வரி

திருவானைக்கா அகிலாண்டேச்வரி

இந்தத் தலமான திருவானைக்கா என்னும் தவ பூமிதான் அன்னை பூமிக்கு வந்து தவம் செய்யத்தேர்ந்த இடம். திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகும். ஏன் அன்னை இங்கு தவம்

செய்ய வந்தாளென்பதை விளக்கும் கதை இதோ! கயிலையில் ஒருநாள் ஈசனுமபிகையும் ஏகாந்தமாக இருந்தனர். அப்போது ஈசன் யோகநிலையை மேற்கொண்டார். அதனால், 'அருகில் தேவி நான் இருக்கையில், இவர் எப்படி யோக நிலையில் இருக்கலாம்?’ என்று ஊடல் கொண்டாள் அம்பிகை. மேலும் அவளுக்கு உலகத்தில் உள்ள நம்மையெல்லாம் பார்க்க வேண்டும்; நமக்கு அருள் புரியவேண்டும் என்று ஓராசையும்கூட. அதனால்தான் அம்பிகை அப்படி ஊடல் கொண்டாள். அதன் காரணமாக ஈசனின் கோபத்துக்காளாகி, பூமியையடைந்தாள்.

திருவானைக்கா புண்ணிய பூமியை அடைந்த அம்பிகை, காவிரியின் புனித நீரையே சிவலிங்கமாகத் திரட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். ஈசனைப் பிரிந்து வந்து தவமிருந்து வழிபட்டாலும்கூட, அம்பிகைக்கு ஈசனின் அருளும் அவரை மணந்துகொள்ளும் பேறும் கிடைக்கவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. அம்பிகை இங்கே சிவனிடம் யோகம் பயிலும் சிஷ்யையின் நிலையில் இருப்பதால்தான்

இத் திருத்தலத்தில் அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடைபெறுவதில்லை என்பது ஐதீகம். இந்தத் தலத்தில் உச்சிக் கால பூஜையை அம்பிகையே செய்கிறாள் என்பதுதான் விசேஷம். தினமுமுச்சிக் காலத்தில் அம்பிகையின் சந்நிதியில் இருந்து அர்ச்சகர் வடிவத்திலம்பிகை வெளிப்பட்டு சிவபெருமானை பூஜிக்கச் செல்கிறாள். ஆம், அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர்தான் தினமும் உச்சிக் காலத்தில் அம்பிகைக்கு சாத்திய சிவப்புப் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு, தலையில் கிரீடமும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிந்துகொண்டு, யானை ஒன்று முன்னே செல்ல, மங்கல இசையுடன் ஐயனின் சந்நிதிக்குச் செல்கிறாள். அர்ச்சகர் வடிவத்தில் இருக்கும் அம்பிகை ஐயனை மட்டுமின்றி கோபூஜையும் செய்வதுதான் விசேஷம். அகிலாண்டேஸ்வரி அம்பிகை ஐயனின் பூஜையும் கோபூஜையும் முடித்துவிட்டு வரும்வரை அம்பிகையின் சந்நிதிக் கதவுகள் மூடப்பட்டு இருக்கும்.

ஆதிசங்கரர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, அம்பிகை அகிலாண்டேஸ்வரி மிகவும் உக்கிரமாக இருந்தாளாம். அம்பிகையின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டி, ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரத்தில் அம்பிகையின் உக்கிரத்தை ஆவாஹணம் செய்து, அம்பிகையின் காதுகளில் தாடங்கங்களாக அணிவித்துவிட்டார். அப்போது முதல் அன்னை அகிலாண்டேஸ்வரி சாந்தரூபியாக மாறிவிட்டாள் என்பது தலவரலாற்றுச்செய்தி. பொதுவாக அம்பிகையின் ஆலயங்களில் அம்பிகையின் சந்நிதியில் ஶ்ரீசக்கரம் பிரதிஷ்டைதான் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மட்டும்தான் ஶ்ரீசக்கரமே அம்பாளின் தாடங்கங்களாகப் பிரகாசிக்கின்றன.

 

-ப.சரவணன்