தொடர் 1:
நாயன்மார்கள் வரலாறு:
நாயன்மார்கள் என்போர் சிவதொண்டு புரிந்த சைவ அடியார்கள் ஆவார். அடியார்களை பாடுவதற்காகவே இப்புவியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை சிவபெருமான் அவதரிக்கச்செய்தார்நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாக திருத்தொண்டர் அந்தாதியில் பாடினார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தியதாகவும், அதன் காரணமாகச் சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலைப் படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணிச் சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபது சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை சடையனார்,தாயார் இசைஞானியார் வரலாற்றையும் ஊர் ஊராகச் சென்று அதிக தகவல்களைத் திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
சேக்கிழார் பெரியபுராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினைச் சிவபெருமானாகக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.
இனி நாயன்மார்கள் வரலாற்றை தொடராக வாசிப்போம்.