புதுடெல்லி:
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் 'எக்ஸ்' கணக்கை மத்திய அரசு நேற்று முடக்கியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கிடையில் 'ஸ்கை நியூஸ்' செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த வாரம் அளித்த பேட்டியில், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தல், பயிற்சி அளித்தல், நிதியளித்தல் ஆகியவற்றை பாகிஸ்தான் நீண்ட காலமாக செய்து வருவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம்" என்றார். இதையடுத்து இந்த விவகாரத்தை ஐ.நா.வில் இந்தியா எழுப்பியது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசுகையில், “இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் ஒரு முரட்டு நாடாக பாகிஸ்தான் இருந்து வருவதை இது அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு சர்வதேச மன்றத்தை பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பரப்பினார். ஆனால் உண்மை என்னவென்று இப்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டது” என்றார். இந்நிலையில் கவாஜா ஆசிப்பின் 'எக்ஸ்' சமூக வலைதள கணக்கை இந்தியாவில் மத்திய அரசு நேற்று முடக்கியுள்ளது.