உக்ரைன் - ரஷியா இடையிலான போர் கடந்த 2022 முதல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷிய சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உக்ரைன் பெண் பத்திரிகையாளரின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் ஓராண்டுக்கு முன்னர், 27 வயதான உக்ரேனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் செய்தி சேகரித்துகொண்டுந்தபோது கடத்தப்பட்டார். பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு, அவரின் சிதைக்கப்பட்ட உடல் ஒரு பையில் சமீபத்தில் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விக்டோரியா ரோஷ்சினாவின் உடலில் கண்கள், மூளை மற்றும் குரல்வளை ஆகியவை அகற்றப்பட்ட நிலையில் இருந்தன. இது அவர் அனுபவித்த சித்திரவதைக்கான ஆதாரங்களை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இப்போது உலகம் முழுவதும் மனித உரிமைகள் குறித்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில் விக்டோரியா உலகெங்கிலும் அரசு அதிகாரங்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் சின்னமாக மாறியுள்ளார்.
விக்டோரியா அடைக்கப்பட்டிருந்த ரஷியாவின் ‘பிசாசுகளின் அறை’ என்று அழைக்கப்படும் டாகன்ரோக்கில் உள்ள SIZO-2 சிறைச்சாலை, இப்போது சித்திரவதை செய்யும் இடமாக மாறிவிட்டது.
ஒரு காலத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறைச்சாலையாக இருந்த இந்த இடம், இப்போது ரஷியாவால் உக்ரேனிய கைதிகளை சித்திரவதை செய்யும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு கொண்டுவரப்படும் கைதிகள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு அடிக்கப்படுகின்றனர். மின்சார நாற்காலி, தலைகீழாக தொங்கவிடுதல் போன்ற பயங்கரமான சித்திரவதைகள் இங்கு நடப்பதாக முன்னாள் கைதிகள் தெரிவித்தனர். விக்டோரியாவும் இந்த சிறைக்குக் கொண்டுவரப்பட்டார், அங்கு அவர் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு ஆளானார்.
விக்டோரியா முதலில் எனர்கோடரிலும் பின்னர் மெலிடோபோலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நான்கு மாதங்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய பிறகு, அவர் SIZO-2 சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இங்கேயே கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
உக்ரேனிய புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவரது உடலில் மின்சார அதிர்ச்சி, உடைந்த விலா எலும்புகள், கழுத்து எலும்புகளில் எலும்பு முறிவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இவை அனைத்தும் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
சிராய்ப்புகள், இரத்தக்கசிவுகள், உடைந்த விலா எலும்பு மற்றும் மின்சார அதிர்ச்சிக்கான சாத்தியமான சான்றுகள் உள்ளிட்ட சித்திரவதைக்கான வெளிப்படையான அறிகுறிகளை இது காட்டியதாக உக்ரைனிய வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகத்தின் போர்க்குற்றத் துறையின் தலைவர் யூரி பெலூசோவ் தெரிவித்தார்.
விக்டோரியாவுடன் இருந்த சிறைத் தோழர் ஒருவர் கூறுகையில், அவளின் எடை 30 கிலோவாகக் குறைந்தது. தலையணையிலிருந்து தலையைத் தூக்கக்கூட முடியாத நிலையில் இருந்ததால் நான் உதவினால் மட்டுமே அவளால் எழுந்துகொள்ள முடியும். நான் அவளைத் தூக்கி நிறுத்துவேன், அவள் மேல் படுக்கையைப் பிடித்து நிமிர்ந்து நிற்பாள்” என்று கூறினார்.
கடந்த பிப்ரவரியில் 757 உக்ரேனிய உடல்கள் பரிமாற்றத்தின் மூலம் அவரது உடல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அந்த உடல் அடையாளம் தெரியாத ஆண் என்றும், மாரடைப்பால் இறந்ததாகவும் முத்திரை குத்தப்பட்டிருந்தது.
டிஎன்ஏ சோதனைகளில் அந்த உடல் விக்டோரியா ரோஷ்சினாவின் உடல் என்பது தெரியவந்தது. அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது, தலை மொட்டையடிக்கப்பட்டது மற்றும் கழுத்து உடைக்கப்பட்டிருந்தது.
அவரது முக்கிய உடல் பாகங்கள் அகற்றப்பட்டதால், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் 2022 ஆம் ஆண்டுக்கான ‘பத்திரிகைத் துறையில் துணிச்சலுக்கான விருது’- ஐ பெற்றவர் விக்டோரியா ரோஷ்சினா .
அவர் மரியுபோல் மற்றும் உக்ரைனின் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது மரணம் ரஷியாவின் போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதினின் “பிசாசுகளின் அறை” பற்றிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த, சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து உக்ரைன் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகிறது.