கீ கீ என்று கடிகாரத்தில் நான்கு முறை குயில் கூவிய சத்தம் கேட்டதும் பார்வதி நிதானமாக இருந்தார். வேகமாக ஏழ நினைத்தாலும் முடியவில்லை. முட்டி வலி அதிகமாகிக் கொண்டிருக்கிறது தெரிந்தது. மகனிடம் சொன்னால் வைத்தியம் பார்ப்பான் தான் என்றாலும் அவனுடைய பரபரப்புக்கிடையே தன்னுடைய நோயைச் சொல்ல பார்வதிக்கு மனது வரவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் பேத்தி மித்ரா வந்து விடுவாள். ராகிப்புட்டு வைத்து நெய்யில் வறுத்த முந்திரியை மேலே தூவினார். சிறு சிறு கிண்ணங்களை எடுத்து அதே வடிவத்தில் அழகாகத் தட்டுகளில் வைத்தார். பூப்போல வெந்திருந்த பச்சைப் பயறு சுண்டலை மற்றொரு தட்டில் வைத்து ஸ்பூனையும் தயாராக வைத்தார். பேத்தி வந்ததும் ராகிமால்ட் கலக்கி கொடுத்தால் போதும். கை கால் முகத்தை அலம்பி பேத்தியை வரவேற்கத் தயாரானார்.
பாட்டி..... என்று ஓடி வந்து பேத்தி கட்டிக் கொண்டாள். சீருடைய மாற்றி கைகள் அலம்பி சிற்றுண்டியைக் கொடுத்தார்.
ம்.....யம்மி பாட்டி பேத்தியின் இந்த மகிழ்ச்சிக்காகவே எவ்வளவு நாளானாலும் முட்டி வலியை தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றும் பார்வதிக்கு.
உள்ளறையில் இருந்து வந்த தன் கணவனிடம், என்னங்க .... நம்ம மித்ரா வந்திட்டா. நாம பார்க்குக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்துரலாமா என்றார்.
சரி பார்வதி இதோ அஞ்சு நிமிஷத்துல போலாம் என்று சொன்னது போலவே வந்தார்.
இது இவர்களுக்கு வழக்கமானது. பேத்தியைப் பார்க்கில் விளையாட விட்டு இவர்கள் இருவரும் சிறிது நேரம் அங்கே போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டு வருவது வழக்கம்.
சூரியன் விடைபெறும் மாலை நேரம். சரிங்க இனி ரொம்ப இருட்டாகிடும் போலாம் என்ற படியே பேத்தியைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தனர்.
பேத்திக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது மகனும் மருமகளும் வேலையை விட்டு வந்தனர்.
அம்மா! என்றபடியே
ஓடிவந்த மித்ராவை, மித்து! இது என்ன பழக்கம்? டு யுவர் ஹோம் ஒர்க் பர்ஸ்ட். என்றதும் மித்ராவின் முகம் வாடியது. அவள் ஹோம் ஒர்க் எழுதத் தொடங்கினாள்.
என்ன பெண் இவள்? நாள் முழுவதும் தனியாக இருக்கும் மகள் ஆசையாகக் கட்டிக் கொண்டால் சிரித்துப் பேசுவதற்கென்ன? என்ன வேலையோ?
என்று மனதிற்குள் புலம்பினார் பார்வதி.
மனதுக்குள் தானே புலம்ப முடியும்.
அத்தே! எனக்கு செம டயர்டா இருக்கு. சாப்பிடலாமா? என்றாள் மருமகள்.
நீ கை கால் முகம் அலம்பிட்டு வா நான் எடுத்து வைக்கிறேன் என்று சொன்ன பார்வதி, இந்தாம்மா மஞ்சு இந்த ரெண்டு பத்திரிகை வந்தது என்னன்னு பாரு என்றார்.
மதன்! வாங்க நாம பிரஷ்ஷப் ஆயிட்டு வரலாம் என்று கணவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
என்ன மஞ்சு பத்திரிக்கை என்ற கணவனிடம் ,ம்...
இருங்க பாக்கறேன்
என்ற படியே பத்திரிகையைப் பிரித்தாள்.
ஒண்ணு எங்க சொந்த அத்தை பெண் கல்யாணம். இன்னொன்னு உங்க பெரியப்பா மகனுக்குத் தூரத்துச் சொந்தக்காரங்க வீடு கிரகப்பிரவேசம் இரண்டும் ஒரே நாள் ஞாயிற்றுக்கிழமை தான் வருது.
லீவு நாள் தானே வருது மித்ராவையும் கூட்டிட்டு உங்க அத்த பொண்ணு வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்துடுவோம் என்று கணவன் சொன்னது தான் என்னங்க நீங்க புரியாம பேசுறீங்க தூரத்துச் சொந்தமானாலும் அவங்க உங்க மாமா பையனில்லையா அங்க தான் போகணும் என்றாள் மஞ்சு.
இல்ல மஞ்சு... என்று சொன்ன மகன் மேல் ஏனோ கோபம் வந்தது பார்வதிக்கு. இவன் ஏன் தடுக்கிறான்? ஆனால் ஒன்றும் பேசாமல் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் அறையில் பேசுவது இங்கே கேட்டுக் கொண்டு தான் இருந்தது.
மஞ்சு நீயா பேசுற?
ஆமா! என்ன ஆச்சரியமா பாக்கறீங்க? எங்க அத்த பொண்ணு வீட்ல அவ்வளவு வசதி பத்தாது. தூரத்துச் சொந்தம்னாலும் உங்க மாமா பையன்
கவர்ன்மென்ட் வேலையில் இருக்கிறார். அரசியல் தொடர்பும் இருக்கு நாளைக்கு ஆத்திர அவசரத்துக்கு உபயோகப்படுத்திக்கலாம் என்றாள்.
அதானே! பார்த்தேன் என்பது போல முழித்தான் மதன்.
சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் அம்மா வீட்டைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும் மருமகள்
நாளைய தேவைக்கு இன்று உறவைக் கொண்டாடுவதை காரிய வாதம் என்பதா? சாதுர்யம் என்பதா?
இந்த வயதிலும் வாழ்க்கை சூட்சமம் புரியாத புதிராகவே இருந்தது பார்வதிக்கு. இது சரியா? தப்பா? என்ன பண்ற குழப்பத்தோடு வேலைகளைத் தொடர்ந்தார் பார்வதி.
-தமிழ்நிலா