நல்லான் பெயரில்தான் நல்லான் வெளிப்படையாகச் சொல்வதென்றால் அவன் ஒரு திருடன்
பகலில் பலவீடுகள் பார்த்துவைத்து இரவில் எந்த வழியில் போகவேண்டுமோ அந்தவழியில் வீட்டின் உள்ளே போய் கைக்குக் கிடைக்கும் பணம் பொருள்களை திருடி எடுத்துக் கொண்டு அதை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான்
இதுவரை போலீசில் சிக்கிக் கொள்ளாதவன் அதனால் நல்லான் நல்லவனாக வேண்டிய சூழ்நிலை உருவானது
அரசு மருத்துவ மனையில் மனைவியுடன் நல்லான் இருக்க உடலில் பல இடங்களில் பலமான காயம்பட்டு அதற்கான
அறுவை சிகிச்சை செய்து முடிந்து படுகையில்
படுதிருக்கும் போது
சிறிது நேரம் நல்லானும் நல்லான் மனைவி சோலையம்மாளும்
ஒருவரை ஒருவர் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே
இருந்தார்கள்...
முடிவில் சோலையம்மாள் வாய்திறந்து சத்தமாக இல்லாமல் சன்னக்குரலில் தன் கணவனைப் பார்த்து....
ஏமச்சா நான் எத்தினி தடவ உங்கிட்டே சொன்னேன் களவாடிப் பிழைப்பு நல்லதில்லே அது நமக்கு வேண்டாம்.... வேண்டாமின்னு
கையுங் காலும் நல்லாத்தானே இருக்கு ஏதாவது கௌரவமான வேலை பார்த்துப் பொழைச்சிக்கலாம்
மின்னு...
எங்கே தன் கணவன் சத்தமிட்டுத் தன்னைத் திட்டிவிடுவானோ என்ற அச்சத்தோடு பேச்சை நிறுத்திக்கொண்டாள்
அதுக்கு இப்ப என்னான்றே....என்று
வக்கிரமாக நல்லான்
மனைவியைப் பார்த்து முறைத்தான்
இல்லே மச்சான் நான் சொல்றதே கொஞ்சம் யோசிச்சுப்பாரு....
உன்னே கெஞ்சிக் கேட்டுக்கறேன்
நீ காசு வேணூங்கரதுக்குத் தானே அந்த மச்சு வீட்டுக் குழா வழியா ஏறினே ஏறும்போது கைதவறி கீழே விழுந்து ஒடம்பெல்லாம் காயமாயிடுச்சு நல்ல வேளே உயிருக்கு ஆபத்தில்லாமே கைகால் முடக்கமும் ஆகலே...ஏதோ கடவுள் தந்த கருணையிலே உயிர் பொழச்சுகிட்டே....
ஆமா புள்ளே நீ சொல்றது ஞாயமாத்தா படுது
என்று புரிந்தும் புரியாமலும் தன்பேச்சை நீட்டி இழுத்து நிறுத்தினான் நல்லான்
மச்சான் இனி
இந்த திருட்டை வேலையின்னு செய்யாதே சொல்லாதே
இனி திருட்டுப் பெரட்டு இல்லாமே ஏதாச்சும் ஞாயமான
வேலை செய்து பொழைச்சுக்கலாம்
நானும் உங்கூட
வந்து சேந்து ஒழைக்கறேய்யா
நமக்கு இந்தத் திருட்டு வேலை வேண்டாம் மச்சா
நல்லானுக்கு மனைவி சொல்லும் சொல் ஒவ்வொன்றும் அவன் பெறும் நல்ல வரமாகப் பட்டது மட்டுமல்ல ஒவ்வொரு சொல்லும் ஈட்டியாய் பாய்ந்து உடலெல்லாம் காயங்களை உண்டாக்கியது
மனைவி சோலையிடம்
வாய்திறந்து எந்த பதிலும் சொல்லாமல்
நல்லான் மனத்திற்குள் யோசனைக் விதைகளை நட்டான் அது மரமாகி கிளைபரப்பிக் காய் கனிகளாய்த் தந்தது
கனிகள் தந்த சுவையில் தெளிந்தான்
ஆமாயில்லே அடுத்தவன் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சு வச்ச காசு பணத்தை திருடரது கொடுமை பணத்தைப் பொருளைப் காணாமே தவிக்கிற தவிப்பு அவங்க மனசு எத்தனே காயப்படும் நானிதை இதுவரைக்கும் யோசிக்கவே இல்லே சோலை சொல்ற போதுதான் நல்லா வெளங்குது
நம்ம சோலை சொல்ற மாதிரி திருடறது எவ்வளவு பாவம் அந்தப் பாவத்தைச் செய்ததால்தான் இந்த ஒடம்பிலே இத்தனை காயம் ஆமாம் "காயங்களுக்கும் நியாயங்கள்"இருக்கு அதைப் புரிஞ்சுகிடேன்
இனித் திருடமாட்டேன் சோலை
திருட மாட்டேன் என்று யோசனையின் முடிவில் வாய்விட்டுத் தன் மனைவியிடம்
சொன்னான் நல்லவனாகி விட்ட
நல்லான்.
............
-கவிஞர் நம்பிக்கை நாகராஜன் கோவை.