tamilnadu epaper

கண்ணகியோடுவழக்கு

கண்ணகியோடுவழக்கு


காலங்கடந்தாலும்

கண்ணகியே

ஓர்எதிர்தரப்பு

வழக்குரைஞரின்

வாதமாய் என்குரல்!

நீதி வழுவிய

வேம்புமாலை சூடிய

வேந்தனோடு

வழக்குரைத்து அவன்

இன்னுயிர் பறித்தாய்

இன்னா செய்தாரை

ஒறுத்ததோடு நில்லாமல்

அடங்காத சினத்தால்

மதுரை மாநகரே

செங்கல்சூளையாய்

வெந்து பொசுங்கியது!

வள்ளுவப்பெருந்தகையே!

சினம் கொடியதென்றால்

சினத்தின் உச்சத்தை

அறச்சீற்றமென்பதா?

இங்கே

தீயவரை மட்டுமே

அழிப்பதாயினும்

சட்டத்தை கையில் எடுத்து மன்னிக்கும்

மாண்பினை தொலைத்ததுதான்

மகத்துவமோ?

போர் அறத்தில்

பிரம்மாஸ்திரத்தையே

அசாதாரணமாய்ப்

பிரயோகிப்பது

குற்றமன்றோ?

இடிப்பாரை இல்லா

வேந்தனும் கெடுவான்

கணவனும் கெடுவான்

கற்புக்கரசிக்கு

புரியாமல் போனதோ?

தவறு செய்தல்

மனித இயல்பு

மன்னித்தால்தான்

தெய்வத்தன்மை

தவற்றை உணர்ந்த

பாண்டியன் உயிர்துறந்து

தூயவனானான்!

மறுகணமே

இன்னுயிர் நீத்த

கோப்பெருந்தேவி

அணிந்திருந்த

சிலம்பு முத்தாயினும்

தலைக்கற்பில்

அவள்தான் மாணிக்கம்!



-கவிஞர் த.அனந்தராமன்

 துறையூர்