சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது.
இதில் சென்னை அணி நிர்ணயித்த 104 ரன் இலக்கை கொல்கத்தா 10.1 ஓவர்களில் எளிதாக எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதனால் சென்னை அணியை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர் தோல்விகளால் ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு (அதாவது 10-வது இடம்) சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்றைய போட்டியில் ஐதராபாத் சன்ரைஸ் அபார வெற்றி பெற்றதால் 8-ம் இடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி 9-ம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், 2-ம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ், 3-ம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் உள்ளன.