தினம் வாசலில் வரும் காய்காரர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று தனது பெற்றோரை பார்த்து வந்தார். கையோடு தனது வீட்டில் விளைந்த நல்ல முத்திய பூசணிக்காய் ஒன்றை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.
பூசணிக்காய் புளி கூட்டு நினைவு வர, நாக்கில் எச்சில் ஊரத் துவங்கி விட்டது. பாதி புசணிக்காயை எடுத்து புளி கூட்டு செய்து முடித்தேன்.
இது எனது புக்ககத்தின் (தஞ்சாவூர்)மிக பிரசித்தமான ஒரு டிஷ். சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டீர்கள். உடம்பிற்கும் குளிர்ச்சியை கொடுக்கும்.
இப்போது செய்முறை :
1. முதலில் புசணிக்காயை நன்றாக கழுவி சிறிது சிறுது துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.
2. பின்னர், ஓர் அகண்ட பாத்திரத்தில் நான்கே நான்கு கடலை பருப்பு, ஒரு கை பிடி துவரம்பருப்பு, ஒரு கை பிடி பயத்தம்பருப்பு ஆகியவையை சேர்த்து, அரிந்து வைத்த பூசணி துண்டுகளையும் போட்டு சிறிதளவு நீர் சேர்த்து குக்கரில் வைத்து வேக விடுங்கள்.
3. ஒரு சிறிய கின்னத்தில் சிறிதளவு புளியை வெண்ணீரில் ஊர வைத்துக் கொள்ளுங்கள்.
4. தேவையான அளவு தேங்காய் திறுவலை தயார் செய்து கொள்ளுங்கள்.
5. குக்கர் சத்தம் அடங்கிய பின்னர் அதை திறந்து வேக வைத்த பூசணி மற்றும் பருப்பை வெளியே எடுத்து ஆராய்ந்து பாருங்கள். தண்ணீர் கூட்டு பதத்தை விட கூடுதலாக இருந்தால் சிறிது தண்ணீரை வடித்து விடுங்கள்.
6. இப்போது இலுப்பச்செட்டியை அடுப்பில் வைத்து, சூடு ஏறிய பின்னர் கடுகையும் உளுத்தம்பருப்பையும் தேவையான அளவில் மிளகாயையும் (நீங்கள் வேண்டுமானால் மிளகாய் பொடி உபயோகிக்கலாம்) வெடிக்க விடுங்கள்.
7. அதே இலுப்பச்செட்டியில் வேக வைத்த பூசணி மற்றும் பருப்பு விழுதை சேருங்கள்.
8. இவையுடன் ஊர வைத்திருந்த புளித்தண்ணீரை அளவாக சேருங்கள்.
9. பின்னர் தேவைக்கேற்றார்போல் உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி, மற்றும் சிறிதளவு வெல்லம் (இது optional) சேர்த்து கொதிக்க விடுங்கள்.
10. தயாராக வைத்திருந்த தேங்காய் திருவலை கொதிக்கும் புளி கூட்டுடன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு, கருவேப்பிலையோ கொத்தமல்லியோ போட்டு இறக்கி வையுங்கள்.
சிலர் உளுந்து, கடலை பருப்பு, சீரகம், மிளகாய், ஓரிரு மிளகுகள், தனியா ஆகியவைகள் வருத்து நீர் விட்டு அரைத்தும் விழுதுடன் சேர்த்து கொதிக்க விடுவார்கள்.
சும்மா கம கமவென்று வாசனையுடன் மிக மிக சுவையாக இருக்கும்.
நாங்கள் இதை சாதத்துடன் கலந்து உண்போம். அல்லது குழம்பு சாதத்திற்கு தொட்டுக் கொள்வோம். அல்லது வெறும் கூட்டை ஒரு கின்னத்தில் எடுத்து நெய் சேர்த்து சுட சுட சாப்பிடுவோம்.
நான் இங்கு கூகுளிலிருந்து பூசணிக்காய் புளி கூட்டின் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். அதை பார்க்கும்போதே பசி வந்து விடும் பாருங்கள்.
இந்த பூசணிக்காய் புளி கூட்டை செய்து, சுவைத்து பாருங்கள். விட மாட்டீர்கள்.
-ரமா ஸ்ரீனிவாசன்