tamilnadu epaper

பெருமழிஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா

பெருமழிஞ்சி பெருவேம்புடையார் சாஸ்தா

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ராஜாக்கமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கும் பெருமழிஞ்சி பெருவேம்புடைய தர்ம சாஸ்தா தான் எங்கள் குலதெய்வம்.

தேவர்களை பாடாய்படுத்திய அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் தர்மசாஸ்தாவை படைத்து அசுரனை வதம் செய்தார். அந்த வதம் முடிந்தபின் சிவபெருமான், தர்மசாஸ்தாவிற்கு லிங்க வடிவத்தை கொடுத்தார். அந்த லிங்க வடிவ சாஸ்தா, சுவாமி திருவேம்புடையார் சாஸ்தா என்ற பெயரில் பூர்ணா, புஷ்கலாவுடன் எழுந்தருளி இருக்கும் தலமே பெருமழிஞ்சி. இதில் விசேஷம் என்னவென்றால் பூர்ணா, புஷ்கலாவும் லிங்க வடிவமே.

பெருமாள் நாராயணர் இந்த கோவிலில் கூர்ம அவதாரத்தின் போது பூஜை செய்ததாக ஐதீகம்.

வெகு காலத்திற்கு முன் தர்ம சாஸ்தா மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். ஒரு நாள் அந்த கோவில் பட்டர் மலை மீது ஏறி வந்து கொண்டிருந்த போது கால் வழுக்கி கீழே விழுந்து விட்டார். தன் பக்தருக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனடியாக ஓடிவரும் தர்மசாஸ்தா அவரை காப்பாற்றினார். அப்பொழுது அசரீரியாக இனி என்னை தேடி நீ மலையேறி வர வேண்டாம், கீழே இருக்கின்ற வேப்ப மரத்தின் அடியில் நான் லிங்க வடிவில் இருக்கிறேன் அங்கு சென்று எவ்விடத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை எறும்புகள் என்னை மலர் வைத்து பூஜிக்கின்றனவோ அந்த இடத்தில் எனக்கு கோவில் எழுப்பு என்று கூறினார். அதன்படியே வேப்ப மரத்தின் அடியில் இருந்த சாஸ்தாவை தம்பதி சமேதராக எழுந்தருளச்செய்த கோவில் இருக்கின்ற இடம் பெருமழிஞ்சி. வேப்பமரத்தின் அடியில் இருந்ததால் அவர் திருவேம்புடையார் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

 

லிங்க வடிவில் ஐயப்பன் இருப்பது மிகவும் விசேஷமானது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் இக்கோவிலுக்கு வந்திருப்பதாக தொல்லியல் பதிவுகள் கூறுகின்றன.

இந்த கோவிலில் சென்று சாஸ்தாவை தரிசித்தவர்கள் தங்களின் குறை தீரப் பெற்று எல்லா வளமும், நலமும் பெற்று வருகிறார்கள்.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் சித்திரை உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று இரவு குதிரை வாகனத்தில் சாஸ்தா எழுந்தருளி சாமி புறப்பாடு நடைபெறும்.

கடந்த 2023, செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். அனைவருக்கும் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் எங்கள் குலதெய்வம் திருவேம்புடையாரை நீங்களும் ஒருமுறை சென்று தரிசிக்கலாமே!

 

- V.Chandramouli

Chennai