tamilnadu epaper

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

 

கொங்கேழு சிவத்தலங்கள்.


கொங்கு நாட்டில் தேவாரத் திருமறை பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. அவை பவானி, திருச்செங்கோடு, கொடுமுடி, வெஞ்சமாங் கூடல், கரூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி என்பனவாகும்.


 பண்டைய நாளில் வசதிகள் இல்லாது இருந்த போதிலும் 

இவ்வேழு தலங்களையும் ஒரே நாளில் சென்று வழிபட்டு மகிழ்ந்துள்ளனர் கொங்கு நாட்டு பெருமக்கள்.


செல்ல முடியாதவர்கள் சென்றவர்களை வாழ்த்தி வணங்கியுள்ளனர். சென்று வந்து குதிரைக்கு கூட காணிக்கை செலுத்தி மரியாதை செய்துள்ளனர்.


இதனை 


ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறசை

நீதி அவிநாசி நீள் நணா- மேதினியின்

தஞ்சமாம் செங்குன்றூர் 

தண்முருகன் பூண்டி தமை

நெஞ்சமே நித்தம் நினை.

என்ற வெண்பா நமக்கு அறிவிக்கிறது.


இந்த ஆலயங்களைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வோம்.


கரூர் இன்று கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும் தமிழகத்தின் முக்கிய நகரமாகவும் திகழ்கிறது.

அமராவதி ஆற்றங்கரையில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இறைவி பெயர் சௌந்தரநாயகி.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. கோயிலின் ராஜகோபுரம் ஏழு நிலை மாடங்களுடன் 108 அடி உயரமுடையது.


வெஞ்சமாங் கூடலூர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் கரூரிலிருந்து மதுரை நெடுஞ்சாலையில் 16 கிலோமீட்டர் சென்று பின் தென்திசையாக 10 கி.மீ தொலைவில்

 சிற்றாறும் குடகனாறும் 

கூடுமிடத்தில் அமைந்துள்ளது. கரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இறைவன் கல்யாணவிகிர்தீஸ்வரர். இறைவி

விகிர்தேசுவரி. சேக்கிழாரின் பெரியபுராணம், அருணகிரிநாதரின் திருப்புகழ், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் வெஞ்சமாங்கூடலூர் பாடப் பெற்றள்ளது.


அவிநாசி கோவையிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன் அவிநாசியப்பர். இறைவி-கருணாம்பிகை. சுந்தரரால் பாடப்பட்ட தலம் இது. சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி தேர் புகழ்பெற்றது.


பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் காலத்தை கணக்கிட முடியாத தொன்மையான ஆலயம். ஈரோட்டிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரியும் பவானியும் கூடுகின்ற இடத்தில் கோட்டை போன்ற பெரிய மதிற் சுவர்களுக்குள்ளே சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரத்தில் 'ஈட்டுத்துயரறுக்கும் எம்மான் இடம்'எனவும், அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவாணி கூடற்பெருமான்' எனவும் பாடப்பட்ட தலம் இது. இறைவி வேதநாயகி.


கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் ஈரோடு கரூர் நெடுஞ்சாலையில் ஈரோட்டிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும் கரூரிலிருந்து 

24 கி‌.மீ. தொலைவிலும் காவிரி கரையில் அமைந்துள்ளது. இங்கு ரயில் நிலையம் உண்டு. இறைவி வடிவுடைய நாயகி. 2000 ஆண்டு பழமையான இந்த ஆலயம் திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்றது. மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள தலம் இது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்செங்கோடு மலையின் உயரம் 1075 அடி. மலைமீது செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. மலைப்பாதையும் உண்டு இத்தலத்தை மாணிக்கவாசகர் சம்பந்தர்,அருணகிரியார், பாடியுள்ளனர்.


முருகப் பெருமான் இறைவனை வழிபட்ட திருமுருகன்பூண்டி கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் அவிநாசிக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருப்பூரிலிருந்து 

6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருமுருக நாதர். இறைவி முயங்கு பூண் முலை வல்லியம்மை. இத்தலம் சுந்தரர் வாழ்க்கையில் தொடர்புடையது.


க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.




.