tamilnadu epaper

மதுரையில் பிரபல தொழிலதிபர் சொத்துக்காக கடத்தல்: 9 பேர் கைது

மதுரையில் பிரபல தொழிலதிபர் சொத்துக்காக கடத்தல்: 9 பேர் கைது

மதுரை, ஏப். 17


சொத்துக்காக மதுரை பிரபல தொழிலதிபரை கடத்திய வழக்கில் தனிப்படை போலீசார் 9 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை பீ.பி. குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், மதுரை புறவழிச் சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.


மேலும் இவருக்கு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலம் உள்பட பல கோடி மதிப்புள்ள ஏராளமான சொத்துகள் உள்ளன. சுந்தர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், திண்டுக்கல்லில் சுந்தருக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை சிலர் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தனர். இதையறிந்த சுந்தர் இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் சுந்தருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.


மிரட்டல்


இதையடுத்து எதிர்த்தரப்பினர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த நில விவகாரம் தொடா்பாக சுந்தருக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதை சுந்தர் பொருட்படுத்தவில்லை. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்திலேயே சுந்தருக்கு எதிர் தரப்பினர் மிரட்டல் விடுத்தனர்.


இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சுந்தரை அத்துமீறி உள்ளே புகுந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதையடுத்து இரவில் வீட்டுக்கு வந்த பணியாளா் வீடு திறந்து கிடந்ததைப் பார்த்து உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் வீட்டுக்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சுந்தர் காரில் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கடத்தப்பட்டவரை மீட்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.


இந்த நிலையில் சுந்தர் வீட்டில் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கடத்தலுக்கு உதவியதாக நேற்று முன் தினம் 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெயர், விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இதற்கிடையே சுந்தரராமனை மீட்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சிலர் வடமாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.


போலீசார் கூறுகையில், 'விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார். அப்போது தான், அவர் கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம், இதில், சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும்' என்றனர்.சுந்தர் கடத்தல் சம்பவத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல ரவுடிக்கும், அவரது கூட்டாளிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.