tamilnadu epaper

ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரித் துறை ஆணையர் கைது

ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரித் துறை ஆணையர் கைது

ஹைதராபாத்:

ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார்.


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகத்தின் ஆணையராக ஜீவன் லால் லவாடியா பணியாற்றி வருகிறார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திடம் இருந்து இவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.



இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும பிரதிநிதி ஒருவர் மும்பையில் இடைத்தரகரிடம் ரூ.70 லட்சத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும துணை பொது மேலாளர் விரால் காந்திலால் மேத்தாவை கைது செய்தனர்.


ADVERTISEMENT

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதராபாத்தில் பணியாற்றும் வருமான வரித் துறை ஆணையருக்காக லஞ்ச பணத்தை வழங்கியதாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து ஜீவன் லால் லவாடியா, ஹைதராத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சாய்ராம், ஸ்ரீராம்கோபால், ஹூசைன் ஷா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, “ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மும்பை, ஹைதராபாத், கம்மம், விசாகப்பட்டினம் உட்பட 18 இடங்களில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட ஜீவன் லால் லவாடியாவின் தந்தை ராமுலு, தெலங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் முதலில் காங்கிரஸில் இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். ஜீவன் லால் லவாடியாவின் மனைவி ஷிப்ரா ஸ்ரீவஸ்தவா மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.