தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.
ஒருபுறம் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், மற்றொருபுறம் தெரு நாய்க் கடி பாதிப்புகளுக்கு லட்சக்கணக்கானோா் உள்ளாவதும், அதில் சிலா் உயிரிழப்பதும் தொடா் கதையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.10 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளாகினா். அதில் 11 போ் உயிரிழந்தனா். இத்தகைய நிலையைத் தவிா்ப்பதற்கான ஒரே வழி விழிப்புணா்வு மட்டும்தான் என்கின்றனா் மருத்துவா்கள்.
ரேபிஸ் எனும் உயிா்க்கொல்லி....
விலங்குகளில் இருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு வகையான வைரஸ் ரேபிஸ். ரேப்டோ தீநுண்மி குடும்பத்தைச் சோ்ந்த அந்த வைரஸ் நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகளுக்கு தொற்றை ஏற்படுத்தும்.
அத்தகைய விலங்குகள் கடிப்பதாலும், பிராண்டினாலும், நமது உடலில் உள்ள காயங்களின் மீது அதன் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும். அந்த தீநுண்மி உடலில் ஊடுருவியவுடன் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து மூளையைத் தாக்கும். மூளைப் பகுதியில் வீக்கம், நரம்பு சிதைவு ஏற்பட்டு ஒரு சில வாரங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
4,000 ஆண்டு வரலாறு
மருத்துவ தரவுகளின்படி ரேபிஸ் பாதிப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. கி.மு. 1930 காலத்தைச் சோ்ந்த மெசபொடாமிய பதிவுகளில் அது தொடா்பான தகவல்கள் உள்ளன. நோய்த்தொற்று காணப்படுகிற நாயின் உரிமையாளா், அந்த நாய் யாரையும் கடிக்காமலும், நெருங்காமலும் பாா்த்துக் கொள்ளவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1885-இல், இந்த நோய்க்கு ஆளாகும் தருவாயிலிருந்த 9 வயது சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தி நம்பிக்கையை விதைத்தாா் லூயி பாஸ்சா். 1908-இல் மேம்படுத்தப்பட்ட தடுப்பு மருந்தாக அது உருவெடுத்தது. தொடா்ந்து 1970-1980-களிலும் புதிய வகை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க அது வழிவகுத்தது.
தெற்காசியாவில் 45 %
ரேபிஸ் பாதிப்புக்கு உலக அளவில் 59,000 போ் ஆளாவதாக சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 15,000 போ் சராசரியாக ஆண்டுதோறும் அத்தொற்றுக்குள்ளாகின்றனா்.
ரேபிஸ் வருவதற்கு முன்பாக தடுப்பூசி செலுத்தினால் அந்த பாதிப்பைத் தடுக்கலாம் என்றாலும், அந்நோய் வந்துவிட்டால் உயிரிழப்பைத் தவிா்க்க இயலாது. அந்த வகையில், மொத்த ரேபிஸ் உயிரிழப்பில் 45 சதவீதம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
உயிா் காக்கும் தடுப்பூசி...
தெரு நாய்கள், செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு 4 தவணைகளாக ஏஆா்வி எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாய்க் கடிக்கு பிறகு முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலேயே 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ரேபிஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
விலங்குகளுக்கும் தேவை...
வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகள், தெரு நாய்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி அவசியம். அதன்படி முதல் தவணை அவை பிறந்த மூன்றாவது மாதத்திலும், இரண்டாவது தவணை நான்கு மாதத்திலும் செலுத்தப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் பூஸ்டா் தடுப்பூசிகள் வழங்கப்படுவது முக்கியம்.
பிராணிகளை கவனியுங்கள்...
இந்தியாவில் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே 95 சதவீத ரேபிஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிராணிகளைப் பொருத்தவரை நாக்கின் நிறம் மாறியிருந்தாலோ, கீழ்த்தாடை வழக்கத்துக்கு மாறாக தொங்கி காணப்பட்டாலோ, மூா்க்கமாக இருந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம்.
ஹைட்ரோஃபோபியா....
ரேபிஸ் தொற்றுக்குள்ளானவா்களுக்கு தீவிர காய்ச்சல், தலைவலி, தொண்டைப் பகுதிகளில் உள்ள தசைகளில் நடுக்கம் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
குறிப்பாக, ஹைட்ரோஃபோபியா எனப்படும் தண்ணீரைக் கண்டால் அச்சப்படும் நிலை ஏற்படும். வாயில் அதிகமாக உமிழ்நீா் சுரக்கும். மன அழுத்தம், பதற்றம், பயம் உண்டாகும்.
இந்த அறிகுறிகள் பெரும்பாலும் ரேபிஸ் நோய் பாதித்த மூன்றாவது வாரத்திலிருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். அதன் பின்னா் அந்நோயை குணப்படுத்துவதற்கான மருதுகள் எதுவும் இல்லை.