குடும்ப வாழ்க்கை கசந்தது. கசப்பான முடிவை எட்டினான். அவன் தன் மனைவி, மகன், மகளை விட்டு திடீரென்று கானகம் நோக்கிப் பயணமானான்.
காயோ கனியோ கிடைத்ததைப் புசித்தான். ரோமங்கள் புதர் போல மண்டின.
எதையும் குறிப்பாக வேண்டாமல், இறைவனை நோக்கித் தவமிருந்தான். ஆடை கருப்பாகி கந்தலாகிப் போனது. பொருட்படுத்தவில்லை. சிந்தனை
முழுவதும் ஆண்டவனை நோக்கியே குவிந்து இருந்தது.
பல வருடங்கள் தொடர்ச்சியான தேடலுக்குப் பின் ஒரு நாள் ஜெகஜ்ஜோதியாய் பிரசன்னமாகி நேராக விஷயத்திற்கு வந்தார்..
“பக்தா.. என்ன வேண்டுமோ கேட்டுப் பெறு” என்றார்
அவசர கதியில் சுதாரிக்க முடியாமல், ”இறப்பின் தேதி அறிய வேண்டும்”
என கோரினான்.
”வழங்கினோம்!” எனக் கூறி மறைந்து போனார்
பரமன் அகன்ற பிறகே சுய நினைவிற்குத் திரும்பினான். வரம் கேட்கக் கூட லாயக்கில்லை என்ற அவன் மடத்தனத்தை எண்ணி வருந்தினான்.
வந்த வேலை முடியவே, மீண்டும் தன் குடும்பத்தைத் தேடிப் புறப்பட்டான்.
இடையில் யாரோ ஒரு புண்ணியவான், தன்னைக் குளிப்பாட்டி, சிகையைத் திருத்தி, புத்தாடை அணிவித்து, உணவும் சிறிது பணமும் தந்தார்.
குடும்பத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே கண்டு பிடித்தான். ஆனால் இவனை
ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.
அவர்களை இக்கட்டில் ஆழ்த்த அவன் மனமும் ஒப்பவில்லை.
மீண்டும் பிச்சைக்கார பாத்திரம் ஏற்று நடிக்க ஆயத்தமானான். அடிக்கடி நோய் வாட்டியது. வயிற்று உபாதை தாங்க முடியாமல் தற்கொலைக்கும் முயன்றான். விதியின் தேதி அறிந்திருந்தும் தன் மடத்தனத்தை நொந்தான்.
கடவுளிடம் எத்தனை பக்தியாக இருந்தானோ, அத்தனையும் போச்சு. அவர் மீது உள்ள கோபத்தில் கொந்தளித்தான். நாத்திகவாதியாகவும் மாற முடியாமல் குழம்பினான்.
அந்த சந்தர்ப்பத்தில் பகவான் எழுந்தருளினார். அவனோ முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவரே, ”மகனே” என்றழைக்க ”சொல்லுங்க” என்றான் வேண்டா வெறுப்பாக..
”ஏனிந்த பாராமுகமும் கொந்தளிப்பும்?”
“இடையில் வியாதியின் ஆதிக்கம் வாட்டுவது குறித்து மறைத்ததேன்?”
“அது என் பணியல்ல குழந்தாய்!”
”நான் சுகவீனம் இன்றி இருந்தால் போதும் இறைவா..”
”அப்படியானால் இறக்கும் தேதி மறந்து போகும் பரவாயில்லையா?’
”அதனால் ஒரு புண்ணியமுமில்லை..அவ்விதமே செய்யுங்க போதும்!”
”தந்தோம்!” என்பதற்குள் இடம் வெறுமையாகி இருள் சூழ்ந்தது.
எல்லாம் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுப் போனதன் சாபம்
என்றெண்ணி சமாதானமடைந்தான்.
-பி. பழனி, சென்னை.