tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-04.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-04.05.25



  சசிகலா விஸ்வநாதனின் 'தன்மானம் உண்டோ, இவர்களுக்கு?' என்ற சிறுகதையில் 'சூழ்நிலை அடிமைகள்; அவர்கள் முகத்தில் வெறுப்பான புன்னகை ஒன்று பூத்தது. விடுதலை என்றுமில்லை.' என்ற உண்மையான வரிகள் மனதிற்கு வருத்தத்தை தந்தது. இதைப்போன்ற கோடிக்கணக்கான பேர்களுடைய வாழ்க்கை என்றுதான் மாறுமோ என்ற ஏக்கமும் ஏற்பட்டது.


  சுமதி முருகனின் 'தோற்றம் பெரிதல்ல' என்ற சிறுகதை அபாரம். உருவைக்கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை இந்த கதை நிரூபித்தது. அகிலனின் திறமையை கண்டு அவனது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல; நானும் வியந்துப்போனேன். இது பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நல்ல சிறுகதையாகும்.


  கவி.வெண்ணிலவனின் 'காதலின் பொன்வீதியில்...' தொடர்கதை சிறப்பாக செல்கிறது. இங்கே இந்த சந்தோஷும் சௌந்தர்யாவும் கடற்கரை,கவிதை, பாணிபூரியென்று காதலில் மூழ்கி திளைக்க, அங்கே மாதவனும் நாகராஷும் சதித்திட்டத்திற்கான ஆயத்தங்களை சேய்துக்கொண்டிருக்க, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!


  பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்' என்ற கட்டுரை என்னை சரித்திரக் காலத்துக்கே கொண்டு சென்றது. பழுவேட்டரையர்கள் என்றதுமே எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல்தான் நினைவுக்கு வந்தது. பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினரின் இந்த கட்டுரை பல்வேறு புதிய தகவல்களுடன் சிறப்பாக இருந்தது.


  தினமும் ஒரு தலைவர்கள் வரிசையில் மு.பக்தவத்சலம் அவர்களைப் பற்றி படித்தேன். அறிஞர் அண்ணாவிற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்ற அளவில் மட்டுமே அவரைப்பற்றி அறிந்திருந்தேன். இந்த கட்டுரை அவரது தூய்மையான தன்னலமற்ற ஆதாயம் பெற நினைக்காத அரசியல் வாழ்வை உணர்த்தியது.


  தமிழ்நாடு இ.பேப்பரின் இணைப்பு இதழான 'தெய்வம்' ஆன்மிக களஞ்சியமாக இருக்கிறது. 'திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ பாதாள ஐயனார்', ' "நாராயணன்" என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?', 'ஸ்ரீரங்கநாதனை விட பெரிய பெருமாள்!', 'பெண்கள் அணிய வேண்டிய அணிகலன்களும் அவற்றின் சிறப்புகளும்', 'மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே' போன்ற ஏராளமான கட்டுரைகளும், வண்ணப்படங்களும் மனதிற்கு மகிழ்ச்சியையும் , அமைதியையும் தந்தது.



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.