கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து " என்று தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். ஆனால் இந்த கருத்து இந்தியாவை ஆள்பவர்களுக்கு புரியவில்லையே ! புதிய கல்விக்" />
" கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து " என்று தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். ஆனால் இந்த கருத்து இந்தியாவை ஆள்பவர்களுக்கு புரியவில்லையே ! புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் பிரச்சினை தொடர்கிறதே ! நாங்கள் சொல்லும் கல்வி முறையைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அடம் பிடிக்கிறதே !
" பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன் ? " என்று எடப்பாடி பழனிச்சாமி திமுகவை பார்த்து கேட்கிறார். பாஜகவை தமிழக அரசியல் அரங்குக்குள் நுழைய விடக்கூடாது என்ற கொள்கையுடன் திமுக இருக்கிறது.
ஆனால் அது நுழைவதற்கு நுழைவாயிலாக அதிமுக மாறிவிட்டதுதான் அவர்களுக்கு பதற்றம். பல ஆண்டு காலமாக தமிழகத்தில் தாமரை மலரும் தமிழகத்தில் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர்கள் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அவர்கள் சட்டமன்றத்தில் நுழைவதற்கு அதிமுக நுழைவு சீட்டு கொடுத்துவிட்டது. பிறகு திமுகவினர் பதட்டப்படாமல் என்ன செய்வார்கள் ?
காஸா பகுதியில் பசி, பட்டினி, நோய், வறுமை
மற்றும் உயிர் மேல் உள்ள பயம் ஆகியவற்றால் பாதித்து நடைபிணமாக உலவிக்கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்களுக்காக உதவிப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் தாக்கப்பட்டு இருக்கிறது. இதை யாரும் நியாயப்படுத்த முடியாது.
இது ஒரு கேவலமான செயல்.
போப் ஆண்டவர் உடையில்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்சியளிக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உலகையே தன் பக்கம் இழுத்து இருக்கிறது.
" நான் போப் ஆக இருக்க விரும்புகிறேன் " என்று நகைச்சுவையாக புலம்பித் தள்ளி இருக்கிறார் ட்ரம்ப்.
இது உலகெங்கும் இருக்கும் ரோமன் கத்தோலிக்கர்களை காயப்படுத்தும் பேச்சு என்பது அவருக்கு புரியவில்லை.
அவருக்கு அவரது வாயில் தான் சனி இருக்கிறது.
அவர் பேசும் வார்த்தைகளை அளந்து பேசினால் நல்லது.
நகைக்காக முதிய தம்பதியினரை கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. தங்கத்தின் விலை ஏற ஏற மனித உயிர்களுக்கு ஆபத்து அதிகரித்து கொண்டே வருகிறது. என்னைக் கேட்டால் மக்கள் நகை அணிவதை அரசு தடை செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட கொலைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது படிப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. ( அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் இருந்தால் என் கருத்தைத் தான் கூறுவார் )
" மாநில சுயாட்சி நாயகன் " ஸ்டாலினுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. உண்மையில் மாநில சுயாட்சி நாயகன் அந்த கொள்கையை வகுத்த அறிஞர் அண்ணாதான் என்பது இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.
பாராட்டுகளில் மனம் குளிர்ந்து போவதால் மட்டுமே 2026 தேர்தல்களில் வெற்றிக்கனி தனது மடியில் வந்து விழும் என்று முதலமைச்சர் எதிர்பார்ப்பது தவறு. அதிருப்தியில் இருக்கும் மக்களின் மனதை மாற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகளை காண வேண்டும் அதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்