tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-12.05.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-12.05.25


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயார் என்று ஏ ஐ எம் ஐ எம்

கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான

அசாதுதீன் ஓவைஸி அறிவித்திருக்கிறார்.


இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவருமே தங்களை ஆதரிப்பார்கள் என்று பாகிஸ்தான் தப்பு கணக்கு போட்டு இருக்கிறது.

கடவுளின் கருணையால் தான் நாம் இந்தியாவில் பிறந்துள்ளோம் என்று  ஓவைசி கூறுவது புல்லரிக்க வைக்கிறது.


கூட்டணியை பற்றி கவலை வேண்டாம். அதை நான் முடிவு செய்வேன் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி பொறுப்பாளர்களிடம் எச்சரிக்கும் வகையில் கொஞ்சம் கடினமாக பேசியிருக்கிறார். 


அவர் பேசுவதை பார்த்தால் கூட்டணி மட்டுமே அவருடைய குறிக்கோள் என்று தெரிகிறது.


போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய நகரங்களின் மீது தாக்குதல் நடத்துவதற்காக பறந்து வந்தன என்று செய்தி கவலை அளிக்கிறது. அந்த ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு எதிர்கொண்டு தகர்த்து விட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி.


" தமிழக முதல்வரின் சாதனைகள் 50 ஆண்டு காலத்திற்கு மேல் தமிழக மக்களின் மனதில் நிற்கும் " 

என்று  அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசியிருக்கிறார்.


இப்படி அரசு விழாக்களில் முதலமைச்சரை மகிழ வைப்பதற்காக கட்சிக்காரர்கள் பேசுவது சகஜம்தான்.  50 வருஷம் தேவையில்லை. 2026 வரையாவது மக்கள் முதலமைச்சரின் சாதனையை நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது அவருக்கு நல்லது.


தேர்தல் போரில் வெல்வதற்கு திமுகவிடம் உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் மகளிர் உரிமைத் தொகையும்  மகளிர் இலவச பேருந்து பயணமும்தான்.


மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுங்கள் என்று ஆட்டோக்காரர் கேட்காமலேயே சவாரி செய்பவர் போட்டு கொடுப்பதாக சொல்வது போல மகளிர் உரிமைத் தொகையை ஏற்றித் தருவதாக

ஏதாவது கட்சி சொன்னால் அவ்வளவு பேரும் அந்த கட்சி பக்கம் போய் விடுவார்கள் என்பதை மறக்கக்கூடாது.


வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை குறி வைத்து கொலைகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. 


தனது 99% சொத்துக்களை

தானம் செய்யப்போவதாக

பில்கேட்ஸ் அறிவித்திருக்கிறார்.


பணக்காரனாக தான் சாக விரும்பவில்லை என்றும்

கூறி இருக்கிறார். இவருக்கு ஏற்பட்ட ஞானோதயம் உலகின் மற்ற பணக்காரர்களுக்கும் ஏற்பட்டால் உலகம் சமநிலை பெற்றுவிடும்.


-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்