tamilnadu epaper

வேப்பிலைக்காரியின் விரதம்

வேப்பிலைக்காரியின் விரதம்


மனிதனாய் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பலவிதமான தேவைகள் இருக்கும்.அதாவது கல்வி,செல்வம்,திருமணம்,பிள்ளைப் பேறு மற்றும் உடல்நலம், மன அமைதி என பட்டியலே வைத்திருப்போம். இதை பெறுவதற்கு இறைவனிடம் விரதம் இருந்து வேண்டிக் கொள்வோம். ஆனால் நமது நன்மைக்காக அதாவது உலக நன்மைக்காக அம்மனே விரதம் இருக்கிறாள் என்றால் அது ஆச்சரியம் அல்லவா!?. ஆம்,அகிலம் காக்கும் ஆயிரம் கண்ணுடையாள். சமயபுரத்து மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கிறாள்.

பூ மாரி பொழிந்தால் வான் மாரி பொழியும் .

"சீதளேத்வம் ஜெகன்மாதா சீதளேத்வம் ஜகத்பிதா சீதளே த்வம் ஜகத்தாத்ரி சீதளாயை நமோ நம:"

   இந்த ஸ்லோகம் சீதளாதேவியை குறிப்பது ஆகும்.சீதளா என்றால் குளிர்ச்சி என்று பொருள்.

வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை

தரக்கூடியது மழை.மாரி என்றாலும் மழை.அந்த மாரியை அதாவது மழையை தரக்கூடியவள் மாரியம்மன்.

மாரியம்மன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சமயபுரம் மாரியம்மன் .

சமயத்தில் வந்து காத்திடுவாள் சமயபுரத்தாள். ஆயிரம் கண்ணுடையாள். கண்ணபுரத்தாள். லலிதா சஹஸ்ர நாமத்தில் "ஸஹஸ்ரஶீர்ஷவதனா ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத்"என சொல்லப்படுவள்.

பக்தர்களால் அன்புடனே தாயே மகமாயி என்று அழைக்கப்படுகிறாள்.

கருவறையில் இருக்கும் அம்பாளின் திருமேனி சுதை மூர்த்தியாகும்.ஆகவே உற்சவமூர்த்திக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன

இத் திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது சிறப்பு.ஐந்து தலை நாகம் தலைக்கு குடையாக,தங்க ஜடா மகுடத்துடன் குங்குமம் மேனி அதூவது மாதுளம்பூ நிறத்தவளாக நெற்றியில் அழகிய வைரப் பட்டுகள் மின்ன கண்களில் அருளொளி வீச வைர கம்மல்களுடன் மூக்குத்தியும் சூரிய சந்திரன் போல பேரொளி வீசக் காட்சி தரும் மகா அன்னையின் அற்புதக்கோலம் நம்மை பக்தி பரவசத்தில் மூழ்க வைக்கும். ஆதி சக்தியான இவள் தனது எட்டு கைகளில் இடப்புறமாக கபாலம் மணி வில் பாசமும் வலப்புறமாக கத்தி சூலம் அம்பு மற்றும் முடுக்கி ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளாள்.இடது காலை மடக்கி வலது கால் நெருங்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறை தீர்க்க அருள் பாலிக்கிறாள்.வலது காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. பேரொளி படைத்த அன்னையின் முகத்திலே தோன்றும் சிரிப்பு நம் துன்பங்களை துடைத்து அகற்றுகிறது.அம்மன் கோவில்களில் சிறப்பு பெற்றதும் தலைமை இடமாக விளங்கும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு.

பூக்கொண்டு வர்ஷித்தால் மழை வர்ஷிக்கும். அதுவே பூச்சொரிதல் ஆகும்.

 பிரார்த்தனை தலமாக விளங்கும் இத்தலத்தில் பூச்சொரிதல் விழா மிகப் பிரசித்தி பெற்றது.மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் விழா தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத விமர்சையான பெருவிழாவாகும். இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து திருக்கோயில் இணை ஆணையர் ,செயல் அலுவலர் ,அர்ச்சகர்கள் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் புஷ்ப கூடையுடன் தெரு விதி உலா வருவார்கள்.இதனை அடுத்து காலை 8 மணிக்கு மேல் அம்மனின் பச்சை பட்டினி விரதக் காப்பு கட்டுதல் இனிதே தொடங்கும் .இந்நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை அணிந்து நோன்பு இருப்பர். இந்நிகழ்வன்று யானை மீது அமர்ந்து கொண்டு வரும் புஷ்பங்களால் அம்பாளுக்கும் இதர சன்னிதிகளிலும் புஷ்ப அபிஷேகம் நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் இருந்தும் அம்மனுக்கு ஏராளமான வகைகளுடன் கூடிய மலர்களை அபிஷேகம் செய்வார். அம்மனை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பக்தர்கள் கண்டு இன்புறுவர் தமிழகத்தில் இவ்வாறான பூச்சொரிதல் விழா எங்கும் காணாத அருமையான காட்சியாகும். பூச்சொரிதல் நாளன்று பக்தர்கள் நலன் கருதி அன்று இரவு முழுதும் திருக்கோயில் திறந்து வைக்கப்படுகிறது அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். பூச்சொரிதல் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பல்வேறு பூக்களால் அலங்கரித்து வழிபட்ட வண்ணமாய் இருப்பர்.இந்நாளில் திருக்கோவில் முழுவதும் மலர்வனமாய் காட்சி அளிக்கும்.

பக்தர் கூட்டம் வெள்ளமென அலைமோதும். திருச்சி மாநகரமே கோலாகலம் பூண்டு இருக்கும். பக்தர்கள் பல ஊர்களில் இருந்தும் அதுவும் நடை பயணமாக கொளுத்தும் வெயிலைக் கூட பொருட் படுத்தாமல் சாரைசாரையாக வந்தவண்ணமே இருப்பர்.

பங்குனி மாதம் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் சுற்று வட்டார எல்லா ஊர்களில் இருந்தும் அம்மன் படத்துடன் அலங்காரமாய் பூச்சொரிதலுக்கு பூக்கள் வேனில் வாண வேடிக்கையுடன் வந்து கொண்டே இருக்கும் .

இந்த நாட்களிலே அம்பாளே பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாக விளங்குகிறது. மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைபட்டினி விரதமிருக்கிறாள் . அம்மனின் விரத நாட்களில் வேறு எந்த நைவேத்தியமும் இல்லை.இளநீர் பால் பழம் மட்டுமே.

பொதுவாகவே வெப்பம் சூடு அதிகமாகி காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு உடலும் மனமும் குளிர்ச்சி அடைய மகமாயின் அருளை பெறவேண்டும். கடைசி பூச்சொரிதல் முடிந்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

இந்த வருடம் வருகிற மார்ச் 9.03.2025 அன்று முதல் பூச்சொரிதல் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆத்தாளை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை போற்றிடுவோம், அவள் அருள் பெற்றிடுவோம்.

நன்றி.


-உமாமுரளி

36, முதல் தளம்,

ரோகிணி ரமணீயம் ப்ளாட்ஸ்,

மேல அடையவளஞ்சான் தெரு

ஸ்ரீரங்கம்-620006