கீழ்க்கட்டளைக்கு வீடு மாற்றிக்கொண்டு போகவேண்டிய சூழ்நிலை. ஏற்கெனவே நங்கநல்லூரில் இருந்ததால் ஏராளமான கோயில்கள். சபாக்கள் என நிறைய ஆன்மீகமும் தெய்வீகமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாயிற்று. இங்கு வந்ததும் எதையோ பறிகொடுத்தாற்போல் இருந்தோம்.
என் தங்கையும், அவள் கணவரும் உங்களுக்கு எத்தனை கோயில்கள் வேண்டும். நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக அழைத்து செல்கிறோம் என்றபோது கொஞ்சம் நிம்மதி.
அதே தெருவில்தான் என் தங்கையும் குடியிருந்தாள்.
ஸ்ரீ கனகதுர்கா கோயில், ஸ்ரீ காயத்ரி தேவி கோவில், ஸ்ரீ விஜயகணபதி கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோவில், பெருமாள் கோவில் என களைகட்டியது நாங்கள் சென்று தரிசனம் செய்த கோவில்கள்.
ஸ்ரீ கனகதுர்கா கோவில். அம்பாள் நுழைந்ததும் நம்மை வரவேற்பாள். புலி மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அம்பாளின் கடாக்ஷம் கண் நிறைந்த அம்சமான அழகான காட்சியாகும். கண்களும் மனமும் நிறையும். பெரிய கோவில். கைகூப்பி தொழும்போதே வெற்றி நிச்சயம் என்று மனதில் நம்பிக்கை மிகும்.
இக்கோயில் சென்னையில், கீழ்கட்டளை அருகில் ஜமீன் பல்லாவரத்தில், சுப்ரமண்யபுரம் என்ற இடத்தில் மிகப்பெரிய கோவிலாக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிலைகளும், சிறப்பான ஆகமவிதிப்படி நடக்கும் நித்ய பூஜைகளும் மனத்தை நிறைத்திடும். ஒவ்வொரு சிலையும் நம்முடன் பேசும்.
மற்றொரு விசேஷம் இங்கு அமைந்திருக்கும் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.
கிட்டத்தட்ட 900 வருடங்களுக்கு முன் இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அபீத குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு பூஜிக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருவண்ணாமலை செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து அம்பாளையும் சிவனையும் பார்த்து வணங்கி செல்வதாக ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று இந்த கோவிலில் 'கிரிவலம்' மிக விமரிசையாக நடக்கின்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். கோவிலின் பின் புறத்தில் அமைந்துள்ள சித்தர்கள் தவம் செய்த மலைப்பகுதியை சுற்றி வந்தே கிரிவலம் நடைபெறுகிறது. பிறகு அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்கிருக்கும் ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சன்னதியும் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருக்கடையூர் சென்று செய்து கொள்ள விரும்பும் பக்தர்கள்
இங்கு வந்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மிக விமரிசையாக நடத்திக் கொள்வது மிகவும் தெய்வீகமாக இருக்கும். இங்கிருக்கும் சரவணன் குருஜி அவர்களின் குழுவினர் சிறப்பாக நடத்தி வைப்பார்கள். பக்தர்களும் திருக்கடையூர் சென்று வந்த திருப்தி அடைகின்றனர்.
இம்மலை அடிவாரத்தில் 'பைரவ' சித்தர் அமர்ந்து துர்கையை தியானம் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது.
இவர்தம் தவ இடையூறு காரணமாக, அம்பாளிடம் வேண்ட, அம்பிகை தன்னிரு கண்களையும் 'ராகு' மற்றும் 'கேது' வாக மாற்றி தவத்தை காக்கச் செய்தாளாம். ராகுவும் கேதுவும் பைரவ சித்தரின் தவத்தினை காத்தருளியதாக வரலாறு கூறுகிறது.
சில காலம் கழித்து பைரவ சித்தர் ஜீவ முக்தி அடைந்தார்.
இதன் பின்னர் ஸ்ரீநாகவள்ளி, நாக கன்னி சமேத மங்கள விஸ்வரூப இராகு பகவானும், ஸ்ரீ மங்கள ஞான கேது பகவானும் அம்பாளின் ஆக்ஞைப்படி இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
காலசர்ப்ப தோஷம் என்ற ராகு கேது பரிகார பூஜையை ஏற்று அனுக்ரகம் செய்கிறார்கள்.
இந்த அம்பாள் சமேத இராகு பகவான் கிட்டத்தட்ட ஒன்பது அடி உயரமுடையது. ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் இராகு பகவானுக்கும் அம்பாளுக்கும் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
அன்பர்கள் ஒன்று கூடி இவ்வாலயத்தை அமைத்து, ஆகம முறைப்படி மூன்று விநாயகர் (ருண விமோசன கணபதி/கடன் நிவர்த்தி, மேற்கு முகம் நோக்கி பைரவருடன் காட்சி தருவது, இராஜ கணபதி மற்றும் சங்கடஹர கணபதி) ஒரு சேர காட்சி தருவது மிகச் சிறப்பு.
இங்கு நவக்கிரகங்கள் தாயாருடன் இணைந்து அருள்பாலிப்பது தனி சிறப்பு.
இங்கு பித்ரு தோஷ லிங்கம் இருக்கிறது. பித்ரு தோஷ நிவர்த்தியும் மிக க்ரமமாக செய்கிறார்கள்.
இவ்வாலயத்தின் மிக உயரமான மலைகள் உள்ளது. அதன் கீழ் ஊரும் சுனையானது சித்தர் காலத்திலிருந்து இன்று வரை வற்றியதே இல்லையாம். சென்னையில் வரட்சி ஏற்பட்டாலும் இங்கிருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வார்களாம்.
மாதந்தோறும் அம்பாளுக்கு வளர்பிறை நவமியில் சண்டி ஹோமமும், பௌர்ணமியில் அண்ணாமலையாருக்கு கிரிவலமும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
அம்மாவாசை தினத்தில் மாலையில் மிளகாய் ஹோமம் மிகவும் விமரிசையாக நடைபெறும். கொஞ்சம் கூட நெடி இல்லாமல் இருக்கும். பெண்கள் மிளகாய் சமர்ப்பித்து ஹோமத்திலும் கலந்து கொள்வார்கள்.
முருகன் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருவது, பட்டாபிஷே இராமர் சீதையுடன் இருக்க எதிரே ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்திருப்பது, அம்பாளுடன் சரபேஸ்வரர், சூலினி தேவி, ப்ரத்யங்கரா தேவி, ஸ்ரீ ஐயப்பன், பாலமுருகன் என சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை வரவேற்று நம்முடன் பேசுவது போல் வடிக்கப்பட்டிருக்கும்.
பிரதானமாக அமைந்திருக்கும் கனகதுர்கா தேவி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
அம்பாளின் சந்நிதியில் மஹாமேரு அமைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
அம்பாளின் அருள் மிகவும் சக்தி வாய்ந்தவள். பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் அவளுக்கு நிகர் அவளே.
கனகதுர்காம்பாள், அருணாச்சலேஸ்வர், அபீதகுஜாம்பாள், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, இராகு, கேது தனித்தனி சந்நிதி, ருணவிமோசண கணபதி ஸ்வர்ண பைரவருடன் காட்சி தருவது என எண்ணற்ற விஷேஷங்கள் நிறைந்த இவ்வாலயத்தின் சிறப்புகளை நான் அறிந்த விதத்தில் தெரிவித்திருக்கிறேன்.
இவ்வாலயத்தில் தினந்தோறும் அம்பாளுக்கு நவாவர்ண பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோபுரத்திருப்பணி முடிந்து ஏப்ரல் 7.4.25 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எத்தனையோ சிறப்புகளையும், சக்தியையும், அற்புதங்களையும் கொண்ட ஸ்ரீ கனகதுர்கா கோவிலுக்கு விஜயம் செய்து அருள் பெற்றிடுங்கள்.
-வி.பிரபாவதி
மடிப்பாக்கம்