அமைவிடம்:
சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்குன்றத்தில் உள்ளது ஞாயிறு கோயில். நவக்கிரங்களில் நடுநாயகமாக இருப்பவர் சூரிய பகவான். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு, நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.
கோயிலின் பெருமை:
ஐந்து சூர்ய வழிப்பாட்டுத்தலங்களை "பஞ்ச பாஸ்கரத்தலங்கள்" என்று போற்றுவர். அவைகள்:
1. ஞாயிறு
2. திருச்சிறுகுடி
3. திருமங்கலக்குடி
4. திருப்பதி நியமம்
5. தலை ஞாயிறு.
இந்த 5 கோவிகளில் மற்ற 4 கோவில்களும் தஞ்சை மாவட்டத்தில் இருக்க, "ஞாயிறு கோயில்" மட்டும் சென்னை செங்குன்றத்தில் உள்ளது. கி.பி. 11 ல், சோழர் காலத்தில், தொண்டை நாடு, 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதை, "தொண்டை மண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டு சென்னப்பட்டணம்" என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதன் மூலம் இக்கோயிலின் பெருமை விளங்கும்.
ஸ்தல புராணம்:
பல நூறு ஆண்டுகட்கு முன் சோழ அரசன் ஒருவன், ஆந்திரப் பிரதேசத்தின் மேல் படையெடுத்து செல்ல, இவ்வழி வந்து, சோழவரத்தில் முகாமிட்டான். இங்குள்ள செந்தாமரை தடாகத்தின் நடுவே உயர்ந்து நின்ற "அதிசய மலரை" பறிக்க முயன்றான். முடியவில்லை. உடனே அதன் மேல் தன் வாளை வீசினான். அது கீழிருந்த சிவலிங்கத்தில் பட்டு, குளமே ரத்த வெள்ளமானது. தவறை உணர்ந்த சோழன், தானே வந்த சுயம்பு மூர்த்தியை ஸ்ரீ புதேரீஸ்வரர், ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் என்னும் பெயர்கள் சூட்டி, கோயிலைக் கட்டினான். கோயில், 3 பங்கு தாமரைக் குளத்தில், 1 பங்கு ஆலயத்துடன் அழகுற அமைந்திருக்கிறது. இங்கு நாகலிங்க மலர்களால், நாகராஜ பூஜை செய்ய, நாகலிங்க மரமும் உள்ளது.
ஸ்ரீ சொர்ண அம்பிகை எழில்:
இக்கோயிலில், நான்கு கரங்களுடன் அருள் தரும் சொர்ண அம்பிகைக்கு, நவமாதா பீடம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு, சிதம்பரத்தில் உள்ளது போன்று, ஆனந்த நடராசர், மற்றும் சிவகாம சுந்தரி அழகுடன் காட்சி தருகின்றனர். விநாயகர், முருகன் சன்னதிகளும் உள்ளன. சூரியனுக்கு என்று அமைந்த இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை.
கோயிலின் சிறப்புகள்:
1. கன்வ முனிவர், கோவிலின் சூரிய தடாகத்தின் அருகே ஜீவ சமாதியானார் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் மண்டபத்தில் சிலை உள்ளது.
2. சங்கிலி நாச்சியார் இந்த ஊரில் தான் பிறந்தார். இவர் திருவொற்றியூர் சுந்தரமூர்த்தி சுவாமிகளை மணந்தார். அவர் ஞாயிறு கோயிலை வணங்கி, அருள் பெற்றே, திருவொற்றியூரில் இருந்த சுந்தரரை மணக்கும் பேறு பெற்றார். இவரை "ஞாயிறு கிழாரின் மகள்" என்று அழைப்பதே வழமை.
3. திருக்குளத்தில் குடி கொண்டுள்ள, புஷ்பரதேஸ்வரரை வணங்கி, சூரியனின் சாபம் நீங்கியதால், திருக்குளம் "சூரிய புஷ்கரணி" எனப் பெயர் பெற்றது.
4. செந்தாமரை மலரால் சிவனை வழிப்பட்டு சூரியன் அருள் பெற்றதால், இங்கு வந்து வணங்கும் பக்தர்களின் தோஷத்தை நீக்கி அருள் செய்கிறார் சூரியன்.
5. திருநள்ளாறு சனி தோஷத்தை நீக்குவது போன்று, இங்கு வணங்கும், சூரிய தசை நடக்கும் பக்தர்களுக்கு தோஷம் நீக்குகிறார் சூரியன்.
6. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, பக்தர்கள் வணங்கினால், அவர்களின் பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.
அனுப்புநர்:
S. ராஜசேகர்
எண்1, பொற்றாமரைக் குளம், கிழக்குத் தெரு,
கும்பகோணம் - 612001