“இது எங்கண்ணன்… ஃபாரீன்ல இருந்து எனக்காக அனுப்பிச்சது”

          “ஓ…  நீ மட்டும்தான் யூஸ் பண்ணனுமோ?” அவன் நக்கலாய்க் கேட்க, அவள் எரிச்சலானாள்.

 " />

tamilnadu epaper

“பாரீன் செண்ட் மணக்கவில்லை!”

“பாரீன் செண்ட் மணக்கவில்லை!”

வேகமாய் வந்து  “வெடுக்’கென்று பறித்தாள் கல்பனா. “ஆபீசுக்குத்தானே போறீங்க?... எதுக்கு செண்ட்?”  கேட்டாள்.

          “புதுசா இருக்கேன்னு… எடுத்தேன்!... ஏன் நானெல்லாம் செண்ட் போட்டுக்கக் கூடாதா?"ஆற்றாமையுடன் கேட்டான்.

          “இது எங்கண்ணன்… ஃபாரீன்ல இருந்து எனக்காக அனுப்பிச்சது”

          “ஓ…  நீ மட்டும்தான் யூஸ் பண்ணனுமோ?” அவன் நக்கலாய்க் கேட்க, அவள் எரிச்சலானாள்.

          "நல்லா கும்முன்னு வாசத்தோட ஆபீசுக்குப் போயி… கூட வேலை செய்யற லேடீஸை மயக்கவா?!....வயசு நாப்பதாகுது மனசுக்குள்ளார ‘மல்லு வேட்டி மைனர்’ன்னு நெனப்பு”

          “ச்சை!... நீயெல்லாம் ஒரு பொம்பளையா?” அவளை அருவருப்பாகப் பார்த்தபடி அங்கிருந்து அகன்றான்.

 மதியம் மூணு மணி. காலிங்பெல் அழைப்பு கேட்டு கதவைத் திறந்தாள் கல்பனா.

          “நான் உங்க கணவர் வேலை பார்க்கற ஆபீசுல ப்யூன்… சார் ஆபீசுல திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திட்டார்... அழகப்பா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கோம்… எமர்சென்சில வெச்சிருக்காங்க!....ஹார்ட் அட்டாக்காம்… உங்களை உடனே  வரச் சொல்லியிருக்காங்க!...    கம்பெனி கார்லதான் வந்திருக்கேன்… கிளம்பி என் கூட வாங்க!"

     அடுத்த இருபதாவது நிமிடம் அவள் அழகப்பா ஆஸ்பத்திரியில் இருந்தாள். ஆனால் விதி அவளையும் முந்திச் சென்று கோபாலின் உயிரைப் பறித்துக் கொண்டது.

 கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த கோபாலின் சடலத்தைச் சுற்றியமர்ந்திருந்த உறவுக்காரப் பெண்களின் அழுகைச் சத்தம் அந்தத் தெரு முனை வரை கேட்டது. 

 

சவத்தின் தலை மாட்டில் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் கல்பனா.  

 

ஒரு பெண்மணி கல்பனாவை நெருங்கி, “சவத்தை ரொம்ப நேரம் வெச்சிருந்தா வாசம் அடிக்க ஆரம்பித்து விடும்… வீட்ல செண்ட் இருந்தாக் குடும்மா… கொஞ்சம் போட்டு வைப்போம்!”

     தள்ளாடியபடி சென்று அண்ணன் அனுப்பியிருந்த செண்ட் பாட்டிலை எடுத்து கல்பனா தர,  மொத்தத்தையும் கோபாலின் உடல் மேல் கொட்டினாள் அந்தப் பெண்மணி.

     சவமாய்க் கிடந்த கோபாலின் முகத்தில் உறைந்த சிரிப்பு.

 

முற்றும்

 

முகில் தினகரன், கோவை