கொழும்பு:
மூன்று நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 101 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவல் 30, ஹர்லீன் தியோல் 47, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, 3 நாடுகள் கோப்பையைக் கைப்பற்றியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தப்பட்டு 51 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் ஸ்னே ராணா 4, அமன்ஜோத் கவுர் 3, சரணி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகியாக ஸ்மிருதி மந்தனாவும், தொடர்நாயகியாக ஸ்னே ராணாவும் தேர்வு செய்யப்பட்டனர்.