மதுரை,
மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்.டி.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி, விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர்.
வழக்கின் முழுவிவரம்:-
மதுரை கே.கே. நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல் என்ற இளம் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை திவ்யா (வயது 55) என்பவர் நடத்தி வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஓவியம், பேச்சு, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கு, கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு பள்ளியில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் படித்து வந்தனர்.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன்-சிவஆனந்தி தம்பதியரின் மகள் ஆருத்ரா (4). இந்த குழந்தையும் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தாள். நேற்று காலையில் ஆருத்ராவை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு அமுதன் வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர், பள்ளி வளாகத்தில் ஆருத்ரா, சக குழந்தைகளுடன் விளையாடினாள்.
பள்ளி வளாகத்தின் பின்பகுதியில் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் அருகே குழந்தைகள் விளையாடினர். அப்போது, தொட்டியின் மூடி சரியாக மூடாமல் இருந்ததால், அந்த இடைவெளியில் குழந்தை ஆருத்ரா திடீரென தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடினாள். இதைக்கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக பள்ளி ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆசிரியைகள் ஓடிவந்து, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதை தொடர்ந்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தை ஆருத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் ஆசிரியைகள், பள்ளிக்கூட பணியாளர்கள் என 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆர்.டி.ஓ. ஷாலினி தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர், அந்த மழலையர் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.