டோக்கியோ, ஏப். 2
9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அதன் மூலம் 3 லட்சம் பேர் வரையில் உயிர் இழக்க வாய்ப்புள்ளது என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 ரிக்டரில் நிலநடுக்கம்
உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். பசிபிக் தீவிர வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் பூகம்பத்தகட்டு சந்திப்பு பகுதியில் ஜப்பான் அமைந்திருப்பதே காரணம். ஜப்பானில் உள்ள நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) நிலநடுக்கத்தின் மையமாக உள்ளது. இது இரட்டை பூகம்பத் தகடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது.
இங்கு பிலிப்பைன் கடல் தட்டும், யூரேசிய தட்டும் மோதிக்கொள்கின்றன. இதன் காரணமாக பூமியின் உள் அழுத்தம் அதிகரித்து, ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகும் அபாயம் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு இடையே இந்தப் பகுதி பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது.
ஜப்பான் அரசு அண்மையில் வெளியிட்ட எச்சரிக்கையின் படி, நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் உண்டாகும் சுனாமி அலைகள் ஜப்பானின் கடற்கரை நகரங்களை தாக்கும். இது 3 லட்சம் இறப்புகளை உண்டாக்கும். 1.5 டிரில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் என ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலநடுக்கம் எப்போது நடக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.