tamilnadu epaper

ரூ.8 ஆயிரத்துக்காக மீனவர் கொலை: இளைஞர் கைது

ரூ.8 ஆயிரத்துக்காக மீனவர் கொலை:  இளைஞர் கைது

சென்னை, ஏப்,10-

ரூ.8 ஆயிரத்துக்காக மீனவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்தவர் முருகன் (54). மீன்பிடி வேலை செய்து வந்தார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி காசிமேடு, பழைய வார்ப் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனம் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து மீன்பிடி துறைமுகம் போலீஸார் வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது வீடு அருகே வசிக்கும் ரஞ்சித் (35) என்பவர், முருகனிடம் ரூ.8 ஆயிரம் கொடுத்து, ஆந்திராவில் இருந்து போதைப் பொருள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட முருகன், போதைப் பொருள் வாங்கி தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ரஞ்சித் கையால் தாக்கி கீழே தள்ளியதில் முருகன் உயிரிழந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஞ்சித்தை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி காவலர் உயிரிழப்பு அம்பத்தூர், ஏப். 10- ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி காவலர் புதன்கிழமை உயிரிழந்தார். ஆவடி அருகே கோவில்பதாகை, சாமி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (44).. இவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில் சம்பத் கடந்த 4ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. புதன்கிழமை சம்பத், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பிரபாகரன் (44) என்பவருடன் கோயில்பதாகை கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். பிரபாகரன் கரையோரமாக இருந்துள்ளார். வெகு நேரமாகியும் சம்பத் கரைக்கு திரும்பாததால் பயந்து போன பிரபாகரன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வரை வீட்டிற்கு சம்பத் வராததால், இது குறித்து மனைவி ராஜகுமாரி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் பிரபாகரனிடம் விசாரணை செய்ததில், சம்பத் கால்வாய் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. ஆவடி தீயணைப்பு வீரர்கள் வந்து, கால்வாயில் இரவு முழுவதும் தேடியும் சம்பத் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை ஆரிக்கம்பேடு அருகே, கிருஷ்ணா கால்வாயில் சம்பத் சடலம் மிதப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் சம்பத் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுப்போதையில் கால்வாயில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி சம்பத் உயிரிழந்தது தெரியவந்தது. மூதாட்டியிடம் செயின் பறிப்பு சென்னை, ஏப்.10- சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது, மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க திருவான்மியூர் பெரியார் நகரை சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் (70) என்பவர் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி வேலம்மாள் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வேலம்மாள், இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.