சென்னை:
பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகை திருடிய வழக்கில் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி எஸ்டேட் 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பெண் தொழில் அதிபர் வனிதா சித்தார்த் (38). இவர், கணவருடன் சேர்ந்து டிஜிட்டல் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார்.
பணம், நகைகள் மாயம்: இந்நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி வீட்டிலுள்ள லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்தபோது, சுமார் 24 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைககள், வெள்ளிப் பொருள் மற்றும் ரொக்கம் ரூ.23,500 காணாமல் போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வந்து திருடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் வேலை செய்து வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சங்கீதா (25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
முதலில் தான் திருடவில்லை எனத் தெரிவித்த அவர், போலீஸாரின் தொடர் விசாரணையில் வனிதா வீட்டில் சிறுகச்சிறுக நகைகள் மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள நகைகளை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட சங்கீதா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.