tamilnadu epaper

அனத்யயன காலமும் திருஅத்யயன உற்சவமும்.

அனத்யயன காலமும்   திருஅத்யயன உற்சவமும்.

ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் (திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்) தொடங்கி, தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்) வரையிலான காலம் அனத்யயன  காலம் எனப்படும். 

அதாவது, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குப் புறப்படும் நாள் முதல், அவர் திருவத்யயன உத்சவம்  முடிந்து, ஆழ்வார் திருநகரி திரும்பும் வரை உள்ள நாட்கள் தாம் இவை. 

அவ்வமயம், ஆழ்வாருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் கோவில்களிலும், வீடுகளிலும் திவ்யப் பிரபந்தங்களைச் சேவிக்க மாட்டார்கள். 

திருவரங்கத்துப் பெரியபெருமாள் ஆழ்வாருக்காகவே காத்திருந்து, திவ்வியப் பிரபந்தங்களைச் செவி சாய்ப்பதால், நாமும் காத்திருப்போம். 
 
இந்த அனத்யயன காலத்தில், கோவில்களில் காலையில் திருப்பள்ளியெழுச்சி மட்டும் எல்லா நாட்களும் பாராயணம் செல்வார்கள். 

மார்கழி மாதத்தில் காலையில் விரதம் இருக்கும் போது மட்டும் திருப்பாவையையும் சேவிப்பார்கள். 

மற்ற எந்த நேரத்திலும், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களை அனத்யயன காலத்தில் சேவிக்க மாட்டார்கள். 

அக்காலங்களில், வைஷ்ணவ முறைப்படி, உபதேச இரத்தின மாலை, தேசிகப் பிரபந்தம்  ஆகியவை வீடுகளில் பாராயணம் செய்யப்படும். 
 

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது, எனப் பொருள்படும். 

வேதத்தையும், திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் ஆசாரியனிடமிருந்து கேட்டு,  மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து, கற்றுக்கொள்வது அத்யயனம் ஆகும். 
 
அனத்யயனம் என்றால், ‘அத்யயனம் செய்யாதிருத்தல்’. 

வருடத்தில் சில காலங்கள் வேதம் ஓதப்படுவதில்லை. 

அது போலவே நாலாயிர திவ்யப் பிரபந்தமும் இந்த அனத்யயன காலத்தில் ஓதப்படுவதில்லை. 
 
திருஅத்யயன உற்சவம் :
 
இது அரங்கனுக்குத் தமிழ் வேதத் திருஅத்யயன விழா!

ஆழ்வார்களின் தீந்தமிழ் அருளிச் செயல் விழா!

அரையர்களின் கொண்டாட்ட விழா!

திவ்யப் பிரபந்தப் பண் இசை விழா!

22 நாட்கள் நடக்கும் 'பெரிய திருநாள்' விழா !

வையத்தோரை உய்விக்கும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா! 

பக்தர்கள் பரவசமாகும் பகல்பத்து / இராப்பத்துத் திருவிழா!

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெறும் நாலாயிர நற்றமிழ் விழா!

247 எழுத்துக்கள் கொண்ட தமிழில், அரங்கனுக்கு 247 பாசுரங்கள் பாடிய ஆழ்வார்களின் அனைத்துப் பாசுரங்களுக்கும் விழா!
 

இது எப்படி ஆரம்பமாயிற்று என்பதை இப்போது பார்க்கலாம்.
 
ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிக்கொள்ளப் பட்டு, பகவானின் அர்ச்சா மூர்த்திகளில் ஆழ்ந்து, திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.  

நம்மாழ்வாரின் பாசுரங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆழ்ந்து அனுபவித்து, சேவித்து வந்தார். 
 
ஒரு கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத் திருநாளில் (திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்), நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளிய பின், திருமங்கையாழ்வார், திருநெடுந்தாண்டகம் எனும் தனது பிரபந்தத்தைத் தேவகானத்தில் பாடி நம்பெருமாளை மகிழ்வித்தார். 

அதன் பிறகு திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடி நம்பெருமாளை உகப்பித்தார்.

இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட நம்பெருமாள், "ஆழ்வாரே! உமக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்க, திருமங்கையாழ்வார் தமக்கு இரண்டு விருப்பங்கள் உண்டு  என்று விண்ணப்பிக்கிறார்.

1. மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடங்கிக் கொண்டாடப்படும் அத்யயன உத்சவத்தில், எம்பெருமான், வேதத்துடன் திருவாய்மொழியையும் முழுவதுமாகக் கேட்டு அனுபவிக்க வேண்டும்.

2 . திருவாய் மொழியை உலகோர் உணர சமஸ்கிருத வேதத்திற்கு இணையானது என அறிவிக்க வேண்டும்.

எம்பெருமானும் உள்ளம் உகந்து, இந்த இரண்டினையும் நிறைவேற்றினார்.
 
மேலும், ஆழ்வார்திருநகரியில் அர்ச்சாரூபத்தில் உள்ள நம்மாழ்வாருக்குத் திருமுகம் அனுப்பப்பட்டு, அவரும் உடனடியாகக் கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாகத் தொடர்ந்து, காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். 

உற்சவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தம் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்தினார். 

பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

இப்படிச் சில காலம் சென்றது.
 
கலியுகத்தின் கோலம், காலப்போக்கில் திவ்யப்பிரபந்தம் தாற்காலிகமாக மறைந்து, ஆழ்வாரும் ஸ்ரீரங்கம் எழுந்தருளுவதும் நின்றது.
 
பின்னர் நாதமுனிகள் அவதரித்து, எம்பெருமாளின் கிருபையால், ஆழ்வாரைப் பற்றியும், திவ்யப்பிரபந்தத்தைப் பற்றியும் அறிந்து, ஆழ்வார் திருநகரி சென்றடைந்து, மதுரகவி ஆழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும் கண்ணிநுண் சிறுத்தாம்பைக் கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம கிருபையைப் பெற்று, நாலாயிரமும் சம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று, அனைவருக்கும் அருளி நம்மையெல்லாம் உய்வித்தார்.
 
நாதமுனிகள் தன் சிஷ்யர்களுக்கு அத்யயனம் செய்து வைத்து, ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உற்சவத்தை ஆரம்பித்து வைத்தார். 

நம்மாழ்வார் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படியும் வழி செய்தார். 
 
வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி எனும் எம்பெருமானின் நியமனத்தையொட்டி, நாதமுனிகள் திருவாய்மொழிக்கும் மற்ற பிரபந்தங்களுக்கும் அனத்யயன காலத்தையும் ஏற்படுத்தினார். 
 
அவர், நின்று போயிருந்த அத்யயன உற்சவத்தைத் தொடங்கும் பொருட்டு, எம்பெருமானிடமிருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும், பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உற்சவத்தில் கேட்டு முடிக்கும் வரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் மட்டும் நினைந்தும், வாயினால் மொழியாமலும் இருக்க ஏற்பாடு செய்தார். 
 
மேலும் நாதமுனிகள் பின் வரும் நியமனங்களைச் செய்தார்:
 
1. அத்யயன உற்சவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை), முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், 
கண்ணி நுண் சிறுத்தாம்பு, 
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், ஆகியவை) சேவிக்கப்படும். 
இது பகல் பத்து என்றும், திருமொழித் திருநாள் என்றும் வழங்கப்படுகிறது. 

2.  வைகுண்ட ஏகாதசி அன்று திருவாய்மொழி தொடங்கப்படும்.

3. அன்று தொடங்கி பத்து நாட்களும், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும். 
இது இராப்பத்து என்றும், திருவாய்மொழித் திருநாள் என்றும் அழைக்கப்படும். 

கடைசி நாள் (இருபதாவது நாள்), நம்மாழ்வார் திருவடி தொழல், மற்றும் உயர்ந்த திருவாய்மொழி சாற்று முறையுடன் கொண்டாடப்படும். 

திருவடி தொழலின்போது, அர்ச்சகர்கள் நம்மாழ்வாரைக் கைத்தலமாக எம்பெருமானிடம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு சென்று, எம்பெருமானின் திருவடியில் ஆழ்வாரின் திருமுடி படும்படிச் சேர்த்து விடுவர். 

பின்பு ஆழ்வார் திருத்துழாயால் முழுவதும் மூடப்படுவார். 
இது நம்மாழ்வார் மோட்சம் எனப்படும். 

4. 21ம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், 
பெரிய திருவந்தாதி, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், 
பெரிய திருமடல்) முழுவதுமாகச் சேவிக்கப்படும்.

(இராமாநுஜ நூற்றந்தாதி, நம்பெருமாளின் ஆணையின் பேரில், எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது. 
21ம் நாள் இரவு புறப்பாட்டில் அது சேவிக்கப்படும்).   
 
மேலும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், ஆண்டாளின் திருப்பாவையும், தினந்தோறும் சேவிக்கப்படுகிறது. 

(அனத்யயன காலமாக இருந்தாலும், இவ்விரு பிரபந்தங்களும் முறையே பகவானையும், பாகவதர்களையும் துயில் எழுப்புவதால், அவற்றைச் சேவிக்கத் தடை ஏதுமில்லை).  
 
இவ்வாறு, நாதமுனிகள் தொடங்கி, உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார், 
பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் காலம் வரைச் சென்றது. 
 
பின்னர் இராமானுஜர் காலத்தில், ஒரு முறை ஏதோ ஒரு சில காரணங்களால், நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை. 

அப்போது எம்பெருமானார்  பெரிய கோவிலிலேயே நம்மாழ்வார் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். 

அந்த நம்மாழ்வாரே, திருமங்கையாழ்வார் மற்றுமுள்ள ஆழ்வார்கள், ஆசார்யர்கள், இராமநுஜருடன் எழுந்தருளி, இந்த உற்சவத்தை இப்போது நடத்தி வைக்கிறார்.
 
திருமங்கையாழ்வார் தொடங்கியபோது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மட்டுமே, பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்றது. 

பிற்காலத்தில் நாதமுனிகள் மற்ற திவ்யப்பிரபந்தங்களையும் நம்பெருமாள் கேட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்து, முதல் / இரண்டாம் ஆயிரங்களை பகல் பத்து நாட்களிலும், திருவாய்மொழியை இராப்பத்து நாட்களிலும், மூன்றாம் ஆயிரம் - இயற்பாக்களை இறுதி நாளன்றும் சேவிக்க ஏற்பாடு செய்தார். 

பின்னர் "இராமாநுஜ நூற்றந்தாதியும்' இயற்பாவுடன் சேர்த்துச் சேவிக்கும் முறை ஏற்பட்டது. 
 
அது முதல், மேலே சொன்ன முறைப்படி அத்யயன உற்சவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
அனத்யயன காலத்தில், நமக்கு அருளிச் செயல் அந்வயம் இல்லாவிட்டாலும் கூட, ஆனந்தப்படக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
 
1. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அதி அற்புதமான அத்யயன உற்சவம்; 
அற்புதமான பகவத் அனுபவம் நிறைந்த 21 நாட்கள். 

2. அனைவரும் எதிர்பார்க்கும் அழகான மார்கழி மாதம், மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அருளால் கிடைக்கும் திருப்பாவை அனுபவம்.

3. சாஸ்திரத்தின் உள்ளுரைப் பொருள்களை எளிமையாக வெளியிடும் நமது பூர்வாசார்யர்களின் தமிழ் ஸ்ரீஸுக்திகளைக் கற்றுத்தேற ஒரு அரிய வாய்ப்பு. 
 

நாமும் அந்த அரிய உற்சவத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம். 
 
கவிதா சரவணன்