கோவில்பட்டி,ஏப். 7–
அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தினாலும், நாங்கள் ஆட்சி நடத்துவோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் நமது என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நிச்சயமாக வெல்வார். தமிழகத்தில் முதலில் மொழியை அழிக்க வேண்டும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள்.
பட்டினி திட்டம்
மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது அவர்கள் திட்டம். எங்களுக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. கல்வி மற்றும் நூறு நாள் வேலைத்
திட்டத்திற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. இவ்வளவு நிதியை தரவில்லை என்றால் ஸ்டாலின் என்ன செய்வார். ஐயோ இப்படி பண்ணி விட்டீர்களே அரசு திண்டாடும் என்று ஸ்டாலின் சொல்வார் என்று எதிர்பார்த்தனர்.
மத்தியில் சி.சுப்பிரமணியம் நிதி அமைச்சராக இருந்தபோது வறட்சி தொடர்பாக நிதி பெற்றபோது கருணாநிதியிடம் கணக்கு கேட்பேன் என்றார். நீங்கள் நிதி அமைச்சராக இருக்கும் வரை நான் பணம் கேட்க மாட்டேன் என்று கருணாநிதி சொன்னார்.
அதே தைரியம் எங்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தட்டும். தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.