புதுடெல்லி, ஏப். 9–
பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவுக்கான பயணம். சரியான ஆதரவு இருந்தால், இந்திய மக்கள் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் முத்ரா திட்டத்தின் முக்கியப் பங்கு குறித்து MyGovIndia வெளியிட்டுள்ள தகவலுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பதில்:
முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள 52 கோடிக்கும் அதிகமான பிணையில்லாத கடன்களை வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 70% கடன்கள் பெண்களுக்கு சென்றுள்ளன. 50% எஸ்சி, எஸ்டி, ஓபிசி தொழில்முனைவோர்கள் பலன் பெற்றுள்ளனர். இது முதல் முறையாக உருவாகியுள்ள வணிக உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனுடன் அதிகாரம் அளித்துள்ளது. முதல் மூன்று ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளது. பீகார் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. கிட்டத்தட்ட 6 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது இந்தியா முழுவதும் தொழில்முனைவோருக்கான வலுவான உணர்வை வெளிப்படுத்துகிறது.
“முத்ரா திட்டத்தின் 10 ஆண்டுகள் அதிகாரமளித்தல் மற்றும் தொழில் முனைவை ஊக்குவித்துள்ளது. சரியான ஆதரவு இருந்தால், இந்திய மக்களால் அதிசயங்களைச் செய்ய முடியும் என்பதை இது காட்டியுள்ளது!"
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.