முற்காலத்தில், அசுரர்களினால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பிரதோஷ தினத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று.
இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை சிவபெருமான் அபயம் தந்து காப்பாற்றுவார்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர் வந்தது. எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு சிவனை வழிபடுவது சிறந்த பலனைத் தருகிறது.
பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது.
ரைவதம் என்பது சிவனது முக்கண்களிலும் ஒளிரும் ஒளி ஆகும். இந்த சக்தியின் உருவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார்.
இந்த முனிவர்கள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெற முடியும்.
இத்தலத்தின் அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது.
ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும்.
அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
-- M. ராதாகிருஷ்ணன்
வாணியம்பாடி -635751