கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்திய ராணுவம் மேற்கொண்டது.
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விளக்கமளித்தனர்.
பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் சார்பில் பெண் அதிகாரிகள் இருவர் தலைமையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பெண் அதிகாரிகளுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சா் குன்வர் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.
‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின்(பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், ‘எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால், பத்து முறை மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன்’ என்று விஜய் ஷா தெரிவித்தாா்.
இந்நிலையில் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படியே விஜய் ஷா மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.
மேலும் ‘அரசமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி இப்படி பேசலாம்? என்ன மாதிரியான அறிக்கைகளை நீங்கள் வெளியிடுகிறீர்கள்? அமைச்சர் என்பவர் பொறுப்புடன் பேச வேண்டும். குறிப்பாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற முக்கியமான நடவடிக்கைகளின்போது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய் ஷா வின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது, உணர்ச்சியற்றது என்று கூறிய நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.
.........