எல்லாரும் கொஞ்சம் மூச்சை பிடித்துக் கொள்ள வேண்டும். ஆயகலைகள் 64. அது என்ன? எப்பொழுது பார்த்தாலும் ஆயகலைகள் 64 என்று ஒரு பேச்சு. ஒருவரே அத்தனை கலையும் கற்றுக் கொள்ள முடியுமா என்று நாம் நினைத்தோமே ஆனால் அந்த மனிதன் அஷ்டவதாணியாக இருக்க வேண்டும். அடுத்து பாருங்களேன். நமக்கே ஆச்சரியமாக இருக்கும். வாருங்கள் கலைக்குள் நுழைவோம்.
முதல் 32 இன்று:
1. மாக்கோலம் இடுதல்
2. மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது
3. பாடல்களைப் பாடுவது அதாவது சங்கீதம்.
4. இசைக்கருவிகளை வாசிப்பது. வீணை இதில் வராது. அது தனி.
5. நாட்டியம் ஆடுவது
6. ஓவியம் வரைவது
7. மேனி அலங்காரம் மற்றும் முக அலங்காரம் பற்றிய கலை
8. நகங்களில் மருதாணி பூசிக் கொள்வது, தலைமுடிக்கு நிறப்பூச்சு செய்வது
9. விதவிதமான உயர்ந்த ரக கற்களால் பொம்மையை தயாரித்தல். அந்தக் காலத்தில் முத்தும் ரத்தினமும் பிரசித்தம்.
10. நான்கு பருவ காலங்களுக்கு ஏற்றது போல படுக்கைகளை தயாரிப்பது.
11. இசைக்கருவிகள் தெரிந்தாலும் ஜலதரங்கம் இசைத்தல் ஒரு தனி கலை.
12. வண்ணங்கள் கொண்டு தண்ணீரை உருவாக்கி அதை ஒருவர் மேல் தெளித்து விளையாடுவது ( அதுதான் இன்றைய ஹோலியோ) மற்றும் இதில் நீச்சலும் அடங்கும்.
13. உடை அணியும் கலை
14. பூக்களை கொண்டு விதவிதமான மாலைகளை தொடுத்தல் உதாரணமாக கோவில் திருவிழாக்களுக்கு சரம், மற்றும் பந்து போன்ற மாலைகளை உருவாக்குவது.
15. அதேபோல் பூக்களில் கிரீடங்களை தயாரிப்பது, மற்றும் தலைக்கு எந்த பூவை வைத்து அலங்கரிக்க முடியுமோ அந்த கலை. தாழம் பூக்களை வைத்துப் பின்னும் கலை.அக்காலத்தில் போற்றப்பட்டது
16. திருமண வைபவங்களுக்கு என்று தனித்தனியான ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்திக் கொள்வது.
17. காதணிகளில் விதவிதமான அணிகலன்களை உருவாக்குவது. அக்காலங்களில் சங்கு, நல்ல அழுத்தமான பூக்கள் பிரபலம்.
18. புத்தகங்கள் வாசிப்பது மற்றும் முடியாதவர்களுக்கு படித்துக் காட்டுவது.
19. பாடல்கள் கவிதைகள் புனையும் திறமை.
20. வாசனை திரவியங்களை தயாரித்தல்.
21. ஆடைகளுக்கு ஏற்றபடி அணிகலன்களை தயாரித்து அணிவது.
22. பல வகை வேடங்களை தரித்துக் கொள்வது. வைபவ காலங்களில் இறைவனின் வேடங்களை அணிவது பிரசித்தம்.
23. வித்தைகள் காட்டுவது. அந்த காலத்தில் மாயாஜால வித்தைகள் ரொம்ப பிரசித்தம்.
24. கைகளை பயன்படுத்தி நிழல்களில் பலவித உருவங்களை கொண்டு வருவது.
25. எல்லா வகையான உணவுகள் இனிப்புகள் பானங்கள் காரங்கள் இவற்றை தயாரிக்கும் முறை.
26. தையல் கலை அதிலும் கம்பளி கொண்டு பின்னல் வேலைகள். தையல் கலை இல்லையேல் ஆடைகள் இல்லை.
27. பொம்மலாட்டம் போன்ற கலைகள்
28. வீணை இசை கருவிகளில் தனியாக வந்துவிட்டது. வீணை வாசிக்கும் கலை ரொம்பவே முக்கியம். கஞ்சிரா வாத்தியம் இசைத்தல் தனிக்கலை.
29. பூடகமாய் வார்த்தைகளை வைத்து விளையாடுவது.
30. நாடகக் கலை பிரசித்தம் ஆயகலைகளில்.
31. ஒரு வார்த்தையை கடினமாக கொடுக்கும் போது அதை வைத்து பாடல்களை எழுதும் திறமை.
32. ஒருவர் முடித்த வரிகளில் அடுத்தவர்கள் அதை வைத்து பாடல் பாடும் கலை ( இன்றைய காலகட்டங்களில் அதை அந்தாக்ஷரி என்போம்).
அடுத்த 32ம் நாளை பார்ப்போம்.