tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதி பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதி பாடல்

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்

அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

 

 

பொருளே = செல்வமே

 பொருள் முடிக்கும் போகமே = அந்த செல்வத்தினால் கிடைக்கும் போகங்களே (போகம் = அனுபவிக்க கூடியது)

அரும் போகம் செய்யும்

மருளே = போகத்தை அனுபவிப்பதால் கிடைக்கக்கூடிய மயக்கம்

 

மருளில் வரும் தெருளே= மயக்கத்திலிருந்து கிடைக்கக்கூடிய தெளிவு

 

 என் மனத்து வஞ்சத்து

இருள் =வஞ்சகத்தால் என் மனதில் இருக்கக்கூடிய இருள்

 

ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் = எதுவும் இன்றி ஒளி வடிவமாக கிடைக்கக்கூடிய

 உந்தன்

அருள் ஏது! = எதுவும் இன்றி ஒளியாக கிடைக்கும் உந்தன் அருள் உள்ள எத்தகையது?! அறிகின்றிலேன் = என்னால் அறிய முடியவில்லை அம்புயாதனத்து அம்பிகையே = தாமரை மலர் ஆசனத்தில் அமர்ந்திருக்க கூடிய அம்பிகையே

 

 

தாமரை மலரை ஆசனமாகக் கொண்டு அமர்ந்திருக்க கூடிய அம்பிகையே. தனம், தானியம், பொன், பொருள் என்று இருக்கக்கூடிய செல்வங்களையும், அந்த செல்வங்களை அனுபவிப்பதால் கிடைக்கக்கூடிய போகங்களும், அந்த போகங்களை துய்ப்பதனால் கிடைக்கக்கூடிய மயக்கமும், அந்த மயக்கத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தெளிவே, அடியேன் உடைய மனத்தில் இருக்கக்கூடிய மாய இருளை போக்கி சுடர் ஒளி தரக்கூடிய அம்பிகையே. அடியேன் மீது நீ கொண்ட கருணையானது எத்தகையது?! என்பதை அடியேன் அறிந்தவன் அல்ல.  

 

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை