tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதி பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதி பாடல்

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி

படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே

--------------------

 

சுடரும் கலைமதி= ஒளி வீசக்கூடிய கலைகள் நிறைந்த நிலவில், துன்றும் சடைமுடிக் குன்றில்= இன்று போல் இருக்கும் சடை முடியில் தங்கும், ஒன்றி

படரும்= பற்றி படக்கூடிய, பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து= நறுமணம் வீசக்கூடிய பச்சைக்கொடி போன்று பதிந்து, நெஞ்சில்

இடரும் தவிர்த்து= மனதில் இன்ப துன்பங்களை நீக்கி, இமைப்போது இருப்பார் = ஒரு நொடி போது தியானத்தில் இருப்பவர்கள், பின்னும் எய்துவரோ 

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே = குடலும் கொழுப்பும் ரத்தமும் நிறைந்திருக்க கூடிய உடம்பை பெறுவாரோ? (குரம்பை= உடலாகிய கூடு)

--------------------

ஒளி வீசக்கூடிய பூரணக் கலையுடன் (கலை - பிரதமை, த்வதியை, திருதியை, சதுர்த்தி என ஒவ்வொரு நாளும் வளரும் கலை) கூடிய சந்திரனை சிறு குன்று போல் இருக்கும் தனது சடை முடியில் சூடிய சிவனையும், அந்த குன்றிலே நறுமணத்துடன் படர கூடிய கொடியைப் போன்ற அம்பிகையும் மனதில் தோன்றக்கூடிய ஆசா பாசங்களை நீக்கி ஒரு நொடியாவது தியானிப்பவர்களுக்கு குடல் கொழுப்பு ரத்தம் போன்றவை சூழ்ந்த இந்த உடம்பானது மீண்டும் எய்தாது. அதாவது, மறுபிறப்பு கிடையாது.

 

சிவம் அசையாதது, சக்தி அசைவுடையது. அதனால்தான், அசைவற்ற குன்றை சிவமாகவும், அசைந்து செல்லக்கூடிய கொடியை சக்தியாகவும் குறிப்பிடுகிறார். தன்னை வழிபடும் அன்பர்களுக்கு மென்மையாகவும், தண்மையாகவும் (தண்மை= குளிர்ச்சி) வளைந்து கொடுக்கும் அன்னையை கொடியாக வர்ணிப்பது கவித்துவம் மிக்கது.

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை