அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
--------------------
அரணம் பொருள் என்று= கோட்டைகளை நமது உறுதியான பொருள்கள் என்று மதித்திருந்த,
அருள் ஒன்று இலாத அசுரர்=கருணையே இல்லாத அசுரர்கள், தங்கள்
முரண் அன்று அழிய= தங்களுடைய வலிமை அழிந்து போகும் படி, முனிந்த பெம்மானும், முகுந்தனுமே= எரித்தவர்கள் சிவபெருமானும் நாராயணனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் = அபயம் அபயம் என அடைக்கலம் தேடி வந்த நாயகியின், அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார்= இறப்பு பிறப்பு இரண்டையும், இந்த வையகத்தே = இந்த உலகத்தில் அடைய மாட்டார்கள்.
--------------------
திரிபுரங்களில் பொன் வெள்ளி இரும்பால் ஆகிய மதில் கோட்டைகளே தங்களுடைய பெரும் செல்வம் என்று இருந்த வித்யுன்மாலி, கமலாட்சன், தாரகாட்சன் போன்றவர்களுடைய வலிமையை தனது கோபத்தால் எரித்த சிவபெருமானும், நாராயணனும் அம்பிகையிடம் 'சரணம் சரணம்' என்று தஞ்சம் புகுகிறார்கள். அப்படிப்பட்ட அம்பிகையின் அடியார்கள் முக்தி நிலையை அடைந்து விடுவதால் இனி பிறக்கவும் மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள்.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை