பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே.
---------------------
பதத்தே உருகி - அம்பிகையை வழிபடும் பக்குவத்திலே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி - உனது திருவடிகளையே மனம் நினைந்து, உந்தன்
இதத்தே ஒழுக - உன்னை வழிபடும் நல்வழியிலே மனம் ஈடுபட, அடிமை கொண்டாய் - என்னை அடிமையாக்கி கொண்டாய், இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் - ஆகையால் நான் இனி பிற சமயங்களால் மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன் - அவர்கள் செல்லும் சமய வழிகளில் செல்லேன்,
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூவரும், யாவரும் வழிபடும் புன்னகை உடைய அன்னையே
------------------------
முதல் மூவர்களாகிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மட்டுமல்லாமல் யாவரும் தொழக்கூடிய, புன்னகை பூத்த திரு முகத்தை உடைய அன்னையை. நான் உன்னை வழிபட்டு மனப்பக்குவம் அடைந்து விட்டேன். நீயும் என்னை நல்வழியில் தொழுது செல்வதற்கு என்னை அடிமை கொண்டாய். இது யான் செய்த பெரும் பாக்கியம். ஆகையால், பிற சமய வழிபாடுகளில் நான் செல்ல மாட்டேன். அவர்களுடைய பக்தியில் மனம் மயங்கவும் மாட்டேன்.
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை