மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊரும் பதம் தருமே.
--------------------
மெல்லிய நுண் இடை - மெல்லிய நுண்ணிடையை உடைய, மின் அனையாளை - மின்னலைப் போன்ற ஒளியை ஒத்த, விரிசடையோன்
புல்லிய - விரிந்த சடை உடைய எம்மானால் ஆலிங்கனம் செய்யப்பட்ட, மென்முலை பொன் அனையாளை - தனபாரங்களின் மீது பொன்னாலான ஆபரணங்களை அணிந்த, புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் - வேதங்கள் சொன்ன வண்ணம் புகழ்ந்து தொழும் அடியவர்களை, அடியாரைத் தொழுமவர்க்கு - தொழுபவர்களுக்கு,
பல்லியம் ஆர்த்து எழ - பலவிதமான இசைக்கருவிகள் ஒலித்து எழ, வெண் பகடு ஊரும் பதம் தருமே - வெள்ளை யானை ஆகிய ஐராவதத்தின் மீது வரக்கூடிய பாக்கியம் கிட்டும்.
(படகு - ஆண் யானை)
--------------------
மின்னலைப் போன்று ஒளிரும் மெல்லிய இடையை உடைய அபிராமியை, விரிந்த சடையுடைய பெருமானால் ஆலிங்கனம் செய்யப்பட்ட, பொன்னாலான ஆபரணங்களால் போர்த்தப்பட்ட தனபாரங்களை உடைய அபிராமியை, வேதங்கள் சொன்னபடி தங்கள் வாக்கினால் புகழ்ந்து வணங்கும் அடியவரை, அணுகி தொழும் அடியவர்களுக்கு பலவிதமான வாத்தியங்கள் முழங்க ஐராவதமாகிய வெள்ளை ஆணையின் மீது பவனி வரும் இந்திரப் பதவியை அம்பாள் அருள்வாள்.
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை