tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை   பாடல்

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்

மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு; மேல் இவற்றின்

மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று; முப்புரங்கள்

மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான் பங்கில் வாணுதலே!

------------------------------

 ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு = என்னை ஆள்வதற்கு உன்னுடைய தாமரைத் திருவடிகள் இருக்கின்றது

 

 அந்தகன்பால்

மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு = எம பயம் நீங்குவதற்கு உன்னுடைய கடைக்கண் பார்வை இருக்கிறது.

 

மேல் இவற்றின்

மூளுகைக்கு என்குறை = மேலே சொன்ன வழிகள் இருக்கும்போது அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது என்னுடைய குறை.

 

 நின்குறையே அன்று = உனது குறை இல்லை.

முப்புரங்கள்

மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான் பங்கில் வாணுதலே! = முப்புரங்களை வில்லால் அம்பு கொண்டு மாய்த்த எம்பிரானின் இடமாகத்தில் சேர்ப்பவளே.

-------------------------

 

என்னை ஆள்வதற்கு உனது திருவடி தாமரைகளையும், மரண பயத்திலிருந்து மீள்வதற்கு உன்னுடைய கடைக்கண் பார்வையும் இருக்கும்போது, அவைகளைப் பற்றிக் கொண்டு வாழிமல் இருப்பது என்னுடைய குறை. உன்னுடைய குறையே அன்று. முப்புறங்கள் அழிவதற்கு திருமாலை அன்பாகவும் மேரு மலையை வில்லாகவும் கொண்ட சிவபெருமானது இடது பாகத்தில் சேர்ந்த பரந்த நெற்றியை உடைய அன்னையே.

 

அன்னை எப்போதும் தன் குழந்தை மீது கருணை கொண்டு இருப்பவர் தான். அவளுடைய கருணையே அடைவதற்கான தவங்களை செய்யாமல் நமது ஐம்புலன்களும் வேறு எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. இது நமது தவறு தானே அன்றி அன்னையின் தவறு கிடையாது.

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை