tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை    பாடல்

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

--------------------

புண்ணியம் செய்தனமே = என்ன புண்ணியம் செய்து இருக்கிறாய்!

மனமே= மனமே!

புதுப் பூங்குவளைக்

கண்ணியும் = அன்று பூத்த குவளை மலர் போன்ற கண்களை உடைய அன்னையும்,

 

 செய்ய கணவரும் = சிவந்த நிறமுடைய கணவரும்,

 கூடி நம் காரணத்தால் = சேர்ந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால்,

நண்ணி இங்கே வந்து= விரும்பி நம் இடத்திற்கு வந்து,

 தம் அடியார்கள் நடு இருக்கப்

பண்ணி = தமது அடியார்களின் நடுவில் இருக்கச் செய்து, நம் சென்னியின் மேல் = நம் தலையின் மேல் பத்ம பாதம் பதித்திடவே = அவர்களது தாமரை திருவடிகளை பதித்திடவே.

--------------------

மனமே அன்று பூத்த பூங்குவளை மலர் போன்ற கண்களை உடைய அம்பிகையும், சிவந்த நிறமுடைய கணவரும் சேர்ந்து நமக்கு அருள் புரிய வேண்டும் என்ற காரணத்தால் நம்மிடத்திற்கு விரும்பி வந்து, அவர்களுடைய அடியார்கள் நடுவில் எம்மை இருக்க செய்து எமது தலையின் மீது தங்களது தாமரை திருவடிகளை பதித்திட என்ன புண்ணியம் செய்தேனோ!

 

'உன் நண்பனைப் பற்றி சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன்' என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. நல்ல நண்பர்களை கொண்டிருந்தால் நமக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும். அதுபோல நல்ல அடியார்களின் நடுவிலே என்னை அம்பிகையும், அப்பனும் இருக்க செய்ததால் அம்பிகையும், அப்பனும் தனது திருவடிகளை எனது தலையின் மீது பதிக்கும் பாக்கியம் பெற்றேன் என்று வியந்து பாடுகிறார்.

 

(பைங்குவளை கார்மலரால் செங்கமலப் பைம் போதால் = மார்கழி மாதத்தில் நீராடச் செல்லும் பெண்களுக்கு அந்த குளத்தில் இருக்கும் குவளை மலர்கள் அம்பிகையின் நிறத்தையும், செங்கமலமாக இருக்கும் செந்தாமரை பூக்கள் அப்பனது நிறத்தையும் ஒத்ததாக இருக்கிறது என திருவெம்பாவையில் பாடி மகிழ்கிறார் மாணிக்கவாசகர்).

மகாவிஷ்ணு பாற்கடலில் துயில் கொண்டு இருப்பதால் கடலின் நீல நிறத்தை போல அவரது திருமேனியும் நீல நிறத்தில் இருக்கிறது. சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பதால் அந்த நெருப்பின் நிறமாக அவரது திருமேனி சிவப்பு நிறமாக இருக்கிறது. குளிர்ச்சியான பகுதியில் இருக்கும் மஹாவிஷ்ணுவிற்கு சூட்டை தரும் துளசியும், உஷ்ணமான பகுதியில் இருக்கும் சிவனுக்கு குளிர்ச்சியை தரும் வில்வமும் சாத்தி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இது தட்ட வெப்பநிலையை சீர் செய்வதற்கு உதவுகிறது.  

 

'அடியார் நடுவில் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே....' என மாணிக்கவாசகர் வேண்டுவதும் இங்கே ஒப்பு நோக்கலாம்.

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை