குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே
--------------------
குரம்பை அடுத்து = உடம்பாகிய இந்த கூட்டில், குடிபுக்க ஆவி = குடி புகுந்த என் உயிர், வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை, கோபமான எமனுக்கு அளிக்கப்பட்ட கால அளவை அடைந்து, அடுத்து மறுகும் அப்போது = பிரியும் போது குழம்பி நிற்கும், அப்போது வளைக்கை அமைத்து , வளையல்களை அணைந்த உனது திருக்கரத்தால் அபய முத்திரை காட்டி,
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து= (அ)ரம்பை முதலிய பெண்களுடன் வந்து, அஞ்சல் என்பாய் = 'அஞ்சாதே' என்பாய்,
நரம்பை அடுத்து = நரம்புகளால் அமைக்கப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு, இசை வடிவாய் நின்ற நாயகியே= அதிலிருந்து வெளிப்படும் நாத வடிவாக இருக்கும் நாயகியே.
--------------------
யாழ்போன்ற இசைக்கருவிகளில் நரம்புகளை பொருத்தி இசைக்கும் போது அதிலிருந்து எழும் நாத வடிவாக இருக்கக்கூடிய நாயகியே. இந்த உடம்பாகிய கூட்டிலே சிறிது காலம் தங்கி இருக்கும் உயிர், கடும் கோபமாக இருக்கும் எமன் இறைவன் எனது வாழ்விற்கு அளித்த கால அளவை அடைந்து, என்னை விட்டு பிரியும் பொழுது (அ)ரம்பை முதலிய பெண்களோடு வந்து வளையல்கள் அணிந்த உனது வலது கையால் அபய முத்திரை காட்டி 'அஞ்சேல்' என்று அபயம் அளிக்க வேண்டும்.
உடம்பு வேறு, உயிர் வேறு. இந்த உடம்பை விட்டு உயிர் பிரியும்போது அந்த ஆத்மா எங்கே செல்வது என்று தெரியாமல் அலைபாய்கிறது. அந்த நேரத்தில் 'அஞ்சாதே' என்று அபய கரம் காட்டி அம்பிகை என்னை அரவணைக்க வேண்டும் என வேண்டுகிறார்.
".....உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்...." (உயிர் என்னை விட்டு பிரியும் பொழுது மயிலின் மீது ஏறி விரைவாக வந்து என்னை காக்க வேண்டும்) - திருப்புகழ்
(தொடரும்/ வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை