நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
--------------------
நாயகி - உலகனைத்துக்கும் தலைவி
நான்முகி - நான்முகனான பிரம்மதேவரின் சக்தி
நாராயணி - நாராயணனின் சக்தி
கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்
சாம்பவி - சம்புவான சிவபெருமானின் சக்தி
சங்கரி - இன்பம் அருள்பவள்
சாமளை - பச்சை வண்ணமுடையவள்
சாதி நச்சு வாய் அகி - கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்
மாலினி - பலவிதமான மாலைகளை அணிந்தவள்
வாராகி - உலகங்கள் காக்கும் வராக ரூபிணி
சூலினி - திரிசூலம் ஏந்தியவள்
மாதங்கி - மதங்க முனிவரின் திருமகள்
என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே - (க்யாதி = வடமொழியில் புகழ்) என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
--------------------
இந்த உலகிற்கும் நமக்கும் தலைவியாகவும், நான்கு முகங்களை உடையவளாகவும், கையில் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோத்பலம் போன்ற மலர்களை உடையவளாகவும், சங்கரனின் மனைவியாக சங்கரியாகவும், சியாமளா நிறத்தை உடைய சாமாளையாகவும், விஷத்தை உடைய பாம்பை மாலையாக அணிந்தவளாகவும், வாராகி, சூலினி, மாதங்கி என்று பல திருநாமங்களை தாங்கி கீர்த்தியுடன் திகழக் கூடியவள் அபிராமி அன்னை. அவளது திருப்பாதங்களே நமது வாழ்விற்கு பாதுகாப்பு.
அபிராமி அந்தாதியின் 100 பாடல்களில் இந்தப் பாடல் 50-தாவது பாடலாக வருகின்றது. ஒரு மாலையை கட்டும் பொழுது இடது பக்கம் 50 மலர் அடுக்குகளும் வலது பக்கம் 50 மலர் அடுக்குகளும் இருந்தால் நடுவே ஒரு குஞ்சம் வைப்பார்கள். அதுபோல அம்பிகையின் பாடலில் பெருமை சேர்க்கும் விதமாக நடுவிலே இருக்கும் குஞ்சம் போல அவளது பலவித ரூபங்களையும், திரு நாமங்களையும் வைத்து பாடியதால் இந்த பாடல் அழகு பெறுகிறது.
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை