tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை   பாடல்

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

------------------------

 

வையம் = உலகம், 

துரகம் = குதிரை, 

மதகரி = யானை,

 மாமகுடம் = மணி முடிகள்,

 சிவிகை= பல்லக்கு,

பெய்யும் கனகம் = நிறைந்த பொன், பெருவிலை ஆரம் = விலையுயர்ந்த மாலைகள் , பிறை முடித்த

ஐயன் = பிறை நிலவை அணிந்த சிவபெருமான், திருமனையாள் = மனைவியாகிய அம்பாள், அடித் தாமரைக்கு = தாமரை திருவடிகளுக்கு, அன்பு முன்பு

 = முன் ஜென்மத்தில், செய்யும் தவமுடையார்க்கு= தவம் செய்தவர்களுக்கு, உளவாகிய சின்னங்களே = இருக்கக்கூடிய அடையாளங்கள்

--------------------

இந்த உலகத்தையோ, நாட்டையோ, ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு அலுவலகத்தையோ ஆளக்கூடிய தன்மை, விலை உயர்ந்த குதிரைகள், இன்றைய காலகட்டத்தில் சொல்ல வேண்டுமானால் மிகப்பெரிய பைக்குகள், வலிமை வாய்ந்த யானைகள், இந்த காலத்தில் சொல்ல வேண்டுமானால் இன்னோவா போன்ற கார்கள், மரியாதையுடன் சூட்டப்படும் மலர் மாலைகள், பல்லக்கு, முதலிய மரியாதைகள் இந்த ஜென்மத்திலே ஒருவருக்கு கிடைக்கிறது என்றால், அவர் தனது முன் ஜென்மத்தில் பிறை முடி அணிந்த சிவபெருமானுடைய மனைவியாகிய அம்பாளை தனது ஜெபத்தினால் வழிபாடு செய்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய அடையாளங்கள்.

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை