பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம்
புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப்பாகம் சிறந்தவளே.
--------------------
பரம் என்று உனை அடைந்தேன் - பரம்பொருள் நீதான் என்று உன்னை சரணடைந்தேன், தமியேனும் - கதியற்றவன், என் பத்தருக்குள்
தரம் அன்று இவன் - எனது பக்தர்களுக்குள் தரமில்லாதவன் இவன், என்று தள்ளத் தகாது - என்று ஒதுக்கி விடக்கூடாது, தரியலர் தம்
புரம் அன்று - பகைவர்களுடைய முப்புரத்தை, எரியப் பொருப்புவில் வாங்கிய - மேரு மலையை வில்லாக வாங்கி, போதில் அயன் - தாமரையில் இருக்கும் பிரம்மன்,
சிரம் ஒன்று செற்ற, கையான் - தலை ஒன்றை கொய்த கையான், இடப்பாகம் சிறந்தவளே - இடப்பாகத்தில் அமர்ந்தவளே
-------------------
பகைவர்களுடைய திரிபுரத்தை மேருமலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு எரித்தவரும், தாமரை மலரில் இருக்கக்கூடிய பிரம்மனின் தலையில் ஒன்றை கொய்தவருமாகிய பரமனின் இடபாகத்தில் இருக்கும் அன்னையே. இந்த உலகத்தில் கதியற்று இருக்கும் இந்த ஏழை உனது திருவடிகளே பாதுகாப்பு என்று சரண் அடைந்துள்ளேன். எனது பக்தர்களிலேயே இவன் தரமற்றவன் என்று என்னை தள்ளி விடாதே. என்னை காப்பாற்று.
இந்தப் பாடலிலேயே திருமாலையும் பிரம்மனையும் எதற்கு குறிப்பிடுகிறார் என்றால்?
திரிபுரங்களை எரிக்கும் பொழுது மேரு மலையை வில்லாகவும், ஆதிசேஷனை அம்பாகவும் கொண்டார் பரமன். அந்த அம்பினாலே திரிபுரங்கள் எரிய போகிறது. எனது அம்பு தான் திரிபுரத்தை எரிக்க போகிறது என்று ஆணவம் கொண்டார் திருமால். அவரது ஆணவத்தை அழிப்பதற்காக தனது சிரிப்பாலேயே திரிபுரத்தை எரித்தார்.
சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருப்பது போல பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஆதலால் நான் பரமனுக்கு இணையானவன் என்ற ஆணவம் கொண்டார் பிரம்மன். ஆதலால், பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்தார் சிவபெருமான்.
இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஆணவத்தை அளிக்கக் கூடியவர் சிவபெருமான்.
(போதி = தாமரை)
பூங்குவளை 'போதில்' பொறி வண்டு கண் படுப்ப - திருப்பாவை
'போதி'ற் பிரமன் புராரி முராரி - திருப்புகழ்
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை