கொச்சி:
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் பங்கு’ என்ற தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐஓடி) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் பேசியதாவது:
சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்ஐஓடி இந்த திட்டத்தைச் செயல்படுத்தும். ‘மட்ஸ்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி நீர்மூழ்கி வாகனம் தயாரிக்கப்படுகிறது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இது 25 டன் எடை கொண்ட 4-வது தலைமுறை வாகனம் ஆகும். ஆழ்கடலின் தீவிர அழுத்தம் மற்றும் வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, 3 விஞ்ஞானிகளை 6 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை அழைத்துச் செல்லும். இதன் மேல் பகுதி டைட்டானியத்தால் தயாரிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்கடலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களை மதிப்பிட இந்த திட்டம் உதவும். அத்துடன் விரிவான கடல் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் சுற்றுலாவுக்கான சாத்தியக் கூறுகள் பற்றி அறியவும் இது உதவும். இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.